கோவை உயிரியல் பூங்காவில் இருந்து வேலூருக்கு முதலை, நட்சத்திர ஆமைகள் வருகை

வேலூர்: கோவை மாநகராட்சி சிறு வன உயிரியல் பூங்காவில் இருந்து முதலை உட்பட வன உயிரினங்கள் கொண்டுவரப்பட்டு வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. கோவை மாநகராட்சி வஉசி பூங்காவில் 3.5 ஏக்கர் பரப்பளவில் சிறு வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு வகையான 600க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. பூங்காவை சுற்றிலும் ஏற்பட்ட குடியிருப்புகள், இடநெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் அந்த பூங்காவுக்கான அனுமதியை தேசிய வன உயிரின ஆணையம் திரும்ப பெற்றது.

அதோடு இங்கு பாதுகாப்பற்ற சூழலில் உள்ள வன உயிரினங்களை வேறு வனஉயிரியல் பூங்காவுக்கு இடம் மாற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு பராமரிக்கப்பட்டு வந்த கடமான், புள்ளி மான்கள், பல்வேறு வகையான ஊர்வன வகை விலங்குகள் என மாற்றப்பட வேண்டிய பட்டியலில் உள்ள வனஉயிரினங்களை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டம் அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு இடம் மாற்றும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சேர்ந்த வனஅலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் குழு கோவைக்கு சென்றது. அங்கு மாற்றப்பட வேண்டிய உயிரினங்களை பாதுகாப்பான முறையில் பெட்டிகளில் அடைத்து வண்டலூர் மற்றும் அமிர்திக்கு கொண்டு வரும் பணியை மேற்கொண்டது.

அதன்படி 2 முதலைகள், 3நட்சத்திர ஆமைகள், 4 சாரைப்பாம்புகள் ஆகியன அமிர்தி வனஉயிரியல் பூங்காவுக்கு எடுத்து வரப்பட்டன. அங்கு அவற்றை அமிர்தி வனச்சரகர் குணசேகரனிடம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வன அலுவலர்கள் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து முதலை அதற்கான காட்சி கொட்டடியிலும், சாரைப்பாம்புகளும், நட்சத்திர ஆமைகளும் அதற்கான காட்சி கொட்டடிகளிலும் நேற்று மாலை விடப்பட்டன.

The post கோவை உயிரியல் பூங்காவில் இருந்து வேலூருக்கு முதலை, நட்சத்திர ஆமைகள் வருகை appeared first on Dinakaran.

Related Stories: