பாஜ அரசை வீழ்த்தி மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜ அரசை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் 114 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து மாநில அரசில் அமைச்சராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது சாக்களுடன் பாஜவில் இணைந்தார்.

இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியை இழந்தது. இதையடுத்து சிவராஜ் சிங் சவுன்கான் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். இவரது ஆட்சிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து அம்மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 17ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ், பாஜ இடையேதான் நேரடி மோதல் உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜவும், இழந்த ஆட்சியை அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இதை மேலும் அதிகரிக்கும் வகையில் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தோல்வியடையும் என்றும் காங்கிரஸ் அரியணை ஏறும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 112-122 தொகுதிகளில் வெற்றிவாகை சூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜவுக்கு 107-115 இடங்கள் வரைதான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 3-7 இடங்களை பிடிக்கும். காங்கிரசுக்கு 44.90 சதவீத வாக்குகளும், பாஜவுக்கு 43.70 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

The post பாஜ அரசை வீழ்த்தி மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: