மதுரையில் வழக்கு தொடர்ந்தவர் பஞ்சாப் ஐகோர்ட் நீதிபதியா? சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையில் வழக்கு தொடர்ந்தவர் பஞ்சாப் ஐகோர்ட் நீதிபதியா என்பது குறித்து சிபிஐ வழக்கு பதிந்து விசாரிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியை சேர்ந்த பாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2014ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம், கீழநாகாச்சி தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக் நிறுவனம் அமைக்க எனக்கு 2000ம் ஆண்டில் 2 ஆயிரம் சதுர அடி ஒதுக்கப்பட்டது. முன்பணம் ேபாக மீதி தொகையை 8 மாத தவணைகளில் செலுத்த கூறினர். தவணையை முறையாக செலுத்தவில்லை எனக்கூறி எனக்கான ஒதுக்கீடு 2004ல் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் உத்தரவுப்படி ரூ.11.25 லட்சத்தை ஒரே தவணையில் செலுத்த கூறியுள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். விசாரணையின் போது மனுதாரரும் ஆஜராகியிருந்தார். சிட்கோ தரப்பில், மனுதாரர் ஐகோர்ட் நீதிபதி எனக்கூறி உயர் அதிகாரிகளுக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பி.புகழேந்தி, ‘‘இந்த வழக்கு 2014ல் விசாரணைக்கு பிறகு இப்போது தான் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. எந்தவித இடைக்கால உத்தரவும் இல்லை. அதேநேரம் சம்பந்தப்பட்ட நிலம் சிட்கோ தரப்பில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் ேமல் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால், மனுதாரர் தன்னை ஐகோர்ட் நீதிபதி என இமெயிலில் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதாகவும் கூறி அதற்கான உத்தரவை காட்டினார். அதைப் பார்க்கும் போது அவர், நீதிபதி என்பது உண்மை எனத் தோன்றுகிறது. ஆனால், நியமன அறிவிப்பாணையை படித்தால் பல சந்தேகங்கள் எழுகிறது.

தற்போது நீதிபதி என கூறுபவர், கடந்த 10 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் முதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வரை வழக்கறிஞராக பணியாற்றுவதாக அனுபவ சான்றிதழும் கொடுத்துள்ளார். எனவே, அவர் தாக்கல் செய்த நீதிபதி நியமன அறிவிப்பாணை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால், சிபிஐ மதுரை எஸ்பி ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். சிபிஐ தரப்பில் வழக்குப் பதிந்து மனுதாரர் தாக்கல் செய்த நீதிபதி நியமன அறிவிப்பாணையின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க வேண்டும். விசாரணையில் அறிவிப்பாணை முறைகேடானது என தெரியவந்தால் சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதி நியமன அறிவிப்பாணையின்படி பலன்களை அனுபவித்துள்ளாரா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

The post மதுரையில் வழக்கு தொடர்ந்தவர் பஞ்சாப் ஐகோர்ட் நீதிபதியா? சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: