தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டம் அரசியல் கட்சிகளுக்கு நிதி தருபவர்களை அறிய வாக்காளர்களுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

புதுடெல்லி: அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் முதல் நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கபில் சிபல் ஆகியோர் வாதத்தில், ‘‘தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டம் என்பது இந்திய இறையான்மைக்கு எதிரானதாகும். மேலும் இது ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த வேரையும் அறுத்து விடும். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல் கட்சிகளுக்கு யார் நிதியளிக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்துகொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு நிச்சயமாக உண்டு. இதுபோன்ற நன்கொடைகள் ஊழலை தான் ஊக்குவிக்கிறது’’ என தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘‘தேர்தல் பத்திரத்தின் மூலம் நன்கொடை அளிப்பவரின் பெயரை வெளியிட்டால், இந்த கட்சிக்கு நீங்கள் பங்களித்ததை மற்ற அரசியல் கட்சிகள் அறிந்துகொள்ளும் என்றும், அதனால் அவர்கள் பாதிக்கப்படலாம் என்ற ஒரு அனுமானமும் உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் இது அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாக இருக்கிறது’’ என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

The post தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டம் அரசியல் கட்சிகளுக்கு நிதி தருபவர்களை அறிய வாக்காளர்களுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் appeared first on Dinakaran.

Related Stories: