பாஜ அலுவலகத்தை நம்பி இருக்கும் ஆளுநர் ரவி தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்: கே.எஸ்.அழகிரி ஆவேசம்

சென்னை: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39வது நினைவு நாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 148வது பிறந்த நாளை முன்னிட்டு, சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களது உருவ படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தினந்தோறும் தவறான கருத்துகளையே மக்களிடம் பரப்ப முயற்சிக்கிறார். தமிழக அரசு தனது எல்லைகளுக்கு உட்பட்டு தான் கடன் வாங்குகிறது.

ஒன்றிய அரசோ அந்த எல்லைகளை எல்லாம் கடந்து கடன் வாங்குகிறது. பொய்யான தகவல்களை சொல்லி வரும் அண்ணாமலையின் கருத்துகளை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள். கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசை சந்திக்க பயப்படுகிறார் என்று அண்ணாமலை குறை சொல்கிறார். மாநில அரசை சந்திக்க அவர் பயப்படுகிறார் என்றால், தமிழக செயலாளரையோ, காவல்துறையையோ சந்தித்து அவரது குறைகளை சொல்லலாம். ஆனால் அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு பாஜ அலுவலகத்தையே நம்பி இருக்கிறார். எனவே கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் இருந்து வெளியேற வேண்டியவர் அல்ல. வெளியேற்றப்பட வேண்டியவர்களில் ஒருவர். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ அலுவலகத்தை நம்பி இருக்கும் ஆளுநர் ரவி தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்: கே.எஸ்.அழகிரி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: