தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மழை பாதிப்புகளை விரைந்து சரிசெய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: மண்டல குழு தலைவர் உத்தரவு

தாம்பரம்: மழை பாதிப்புகள் குறித்து எந்த நேரத்திலும் புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தலைமையில், மாநகராட்சி உதவி ஆணையர் மாரி செல்வி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில், அந்த மண்டலத்துக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்துள்ள பழைய கால்வாய்களை அகற்றி, புதிய கால்வாய்கள் அமைத்து தர வேண்டும், சேதமடைந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யாமல் முழு சாலையையும் புதியதாக அமைக்க வேண்டும், கால்வாய் தூர்வாரிய இடங்களில், அகற்றாமல் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன் வைத்தனர். அப்போது மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை உறுதியளித்தார். கூட்டத்தில் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை பேசியதாவது: மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை குழாய்களை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2 மாதத்திற்குள் அரசிடமிருந்து அனுமதி கிடைத்தால், ஜனவரி மாதம் ரூ.86 கோடி மதிப்பீட்டில் சீர் செய்யும் பணிகள் தொடங்கி நடைபெறும். அதன் பின்னர் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பது, அடைப்பு ஏற்பட்டது, உடைப்பு ஏற்பட்டது போன்ற பிரச்னைகள் இருக்காது.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது. எனவே அதிகளவில் மழை பெய்யும்போது 5 நாட்களுக்கு முன்பே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்கு தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு, மண்டல அலுவலகத்தில் வந்து தங்கி பணிகளில் ஈடுபட வேண்டும். மழை பாதிப்புகள் குறித்து 24 மணி நேரமும் என்னையும், சட்டமன்ற உறுப்பினரையும் தொடர்பு கொள்ளலாம், பொதுமக்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும் நாங்கள் சம்பவ இடத்திற்கு வர தயாராக உள்ளோம். அதிகாரிகளும் எப்போது வேண்டுமென்றாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.அதேபோல அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். யாரும் வீட்டிற்கு சென்று விட்டு செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது, வாக்கி டாக்கிகளை ஆப் செய்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மழைக்காலத்தில் மழை பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய அனைத்து நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும். மழை பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மரம் அறுக்கும் இயந்திரங்கள், தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள், மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ஆட்கள் தேவைப்பட்டால் மாநகராட்சி ஆணையரின் அனுமதி பெற்று, மேலும் சிலரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக சட்டமன்ற உறுப்பினர், மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல அலுவலகம் என தொடர்பு கொள்ளலாம். பாதிப்புகள் குறித்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனியார் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றால் அவற்றை உடனடியாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் யார் வேண்டுமென்றாலும் ஈடுபடலாம், தண்ணீர் அளவு நிரம்பும் வரை யாரும் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மழைக்காலத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஒரு, ஒரு வார்டுகளாக சென்று ஆய்வு பணிகள் மேற்கொண்டு, பாதிப்புகள் குறித்து உடனடியாக சட்டமன்ற உறுப்பினர், மண்டல குழு தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் உடனடியாக அந்த பாதிப்புகளை நாங்கள் சரிசெய்து தருவோம். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் கால்வாய் சீரமைப்பு, சாலை சீரமைப்பு, கல்வெட்டு அமைப்பது என ரூ.2 கோடி மதிப்பீட்டில் 36 தீர்மானங்களுக்கு அனுமதி பெறப்பட்டது.

The post தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மழை பாதிப்புகளை விரைந்து சரிசெய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: மண்டல குழு தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: