பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை விழா நாளை துவக்கம்: அக்.30ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா நாளை காலை கணபதி ஹோமத்துடன் துவங்க உள்ளது. வரும் 30ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு 116வது ஜெயந்தி விழா, 61வது குருபூஜை விழா, அக். 28ம்தேதி ஆன்மிக விழா, 29ம் தேதி அரசியல் விழா, 30ம் தேதி ஜெயந்தி மற்றும் குருபூஜை அரசு விழா என நடக்க உள்ளது. இதன்படி தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில், நாளை (அக். 28) காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழா துவங்க உள்ளது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், லட்சார்ச்சனை, மாலையில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜைகள் நடக்கிறது.

நாளை மறுநாள் (அக்.29) காலை 2ம் நாள் யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை மற்றும் அரசியல் விழா நடக்கிறது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் பால்குடம், வேல், காவடி, அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்து தேவர் நினைவாலயத்தில் செலுத்த உள்ளனர். 30ம் தேதி காலையில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர். ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொள்வார் என தெரிகிறது. அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செய்ய உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்காக நினைவிட பகுதியில் தென்மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயர் தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. பசும்பொன் நுழைவு பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன. பசும்பொன் கிராமத்தை ஆளில்லா விமானம், 90க்கும் மேற்பட்ட இடங்களில் ெஹச்.டி கேமராக்கள், 10க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் என தீவிரமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை விழா நாளை துவக்கம்: அக்.30ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: