காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் 222வது குருபூஜை விழா: அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை

காளையார்கோவில்: காளையார்கோவில் மருதுசகோதரர்களின் 222வது குருபூஜை விழா நடைபெற்றது. இதில், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் மருதுபாண்டியர்களின் 222வது குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக காளையார்கோவில் கிராம மக்களால் ராஜகோபுர வாசலில் இருந்து 222 பால்குடம் எடுத்தல், அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துதல் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மருது பாண்டியர் வேடமிட்டு சிறியவர்கள், பெரியவர்கள் என சாரட் வண்டியில் முன் செல்ல தொடர்ந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து அவரது நினைவிடம் நோக்கி சென்றனர்.

அங்கு மருதுபாண்டியருக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து மதுரை ஆதினம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அரசியல் கட்சித்தலைவர்கள், பொதுமக்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 3 எஸ்.பி., தலைமையில், 6 ஏ.டி.எஸ்.பி., 20 டி.எஸ்.பி., 45 இன்ஸ்பெக்டர், 360 எஸ்.ஐ., உட்பட 2,057 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டு சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இதுதவிர 23 நான்கு சக்கர வாகனத்திலும், 48 இருசக்கர மோட்டார் வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். குருபூஜையை முன்னிட்டு 7 ஒன்றியங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் மதுபான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்டம் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே காளையார் கோவிலுக்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

The post காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் 222வது குருபூஜை விழா: அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: