ராமேஸ்வரத்தில் இருந்து அண்டை நாடான இலங்கை சில நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சில மணி நேரங்கள் கடலில் பயணித்தாலே சர்வதேச கடல் எல்லையை அடைந்துவிட முடியும். சர்வதேச கடற்பகுதி என்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் இந்திய-இலங்கை கடல் எல்லையில் இருநாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றி வருவார்கள். இந்த சூழலில் மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவதும் அல்லது அவர்களை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் முழுமையாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடிவதில்லை.ஒவ்வொரு முறையும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.
கடந்த 14-ந்தேதி கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இலங்கை கடற்படையின் நடவடிக்கை ராமேஸ்வரம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மீனவர் சங்கங்களின் அவசர கூட்டம் நடந்தது. இதில் சிறையில் வாடும் மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 16-ந்தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் சிறிய படகுகள் மட்டும் கடந்த சனிக்கிழமை மீண்டும் கடலுக்கு சென்று வருகிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவிக்கின்றனர்.
ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மீனவர்கள் ராஜா, எடிசன் ஆகியோர் கூறியதாவது: ஆண்டுதோறும் மீன்பிடிக்க ஏற்ற ஒரே இடமாக ராமேசுவரம் இருந்து வருகிறது. ஆனால் இலங்கை கடற்படையினரின் தொந்தரவால் பாரம்பரிய இடத்தில் கூட மீன்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீன்பிடிக்க ஏற்ற சூழல் இல்லாத நிலையில் நாள்தோறும் அவதிப்பட்டு வருகிறோம்.மீன்பிடிக்க முடியாமலும், படகை இயக்க முடியாமலும் முடங்கிப்போய் உள்ளோம். ஒருமுறை கடலுக்கு சென்றால் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வருமானம் கிடைக்கும். அதுதான் எங்களுடைய வாழ்வாதாரம். தற்போது நடந்துவரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தால் குடும்பம் நடத்த கடன் வாங்கும் சூழலில் இருக்கிறோம்.
மேலும் மீன்பிடி தொழிலின் சார்பு தொழில்கள் அனைத்தும் முடங்கி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே கடலுக்கு செல்லும் எங்களுக்குரூ.5 வரை கிடைத்தது. தற்போது அந்த வருவாய் இன்றி தவிக்கிறோம். மறுபுறம் கடலுக்கு சென்றாலும் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகி இழப்புடன் தான் கரை திரும்பும் நிலை உள்ளது.எனவே மத்திய, மாநில அரசுகள் மீன்பிடி தொழிலை பாதுகாப்புடன் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். வெளிமாநிலங்களை போன்று குத்தகை அடிப்படையில் பாரம்பரிய இடத்தில் சிரமமின்றி மீன்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மீன்பிடி தொழிலை முறைப்படுத்தும் வகையில் படகுகளின் நீளம், அகலம் உள்ளிட்டவைகளை மீன்வளத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post 10-வது நாளாக நீடிக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்: ரூ.10 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.
