ஆசிரியர் தம்பதியை கொன்ற குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படை  5 மாவட்டங்களில் தேடுதல் வேட்டை  தப்பி ஓடியவனை சுட்டு பிடிக்கவும் முடிவு

விழுப்புரம், அக். 21: விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த தலைமை ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான குற்றவாளியை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னலை வைத்து 5 மாவட்டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அருகே வளவனூர் கேஎம்ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்(68). இவரது மனைவி உமாதேவி(65). இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன் சோழனுக்கு திருமணமாகி பெங்களூரிலும், மகள் பத்மா திருமணம் ஆகி புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர். தற்போது வளவனூரில் உள்ள வீட்டில் வயதான தம்பதி மட்டும் வசித்து வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் மாலை மகள் பத்மா பெற்றோருக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாக போன் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அக்கம் பக்கத்தினரிடம் போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது இருவரும் தனித்தனி அறைகளில் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர் பத்மாவிடமும், அருகில் உள்ள வளவனூர் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் டிஐஜி ஜியாவுல்ஹக், எஸ்பி சஷாங்சாய் உள்ளிட்டவர்களும் நேரில் விசாரணை நடத்தினர். ராஜன், உமாதேவி இருவரும் கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து அவர்கள் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று காலை வழக்கம் போல் இருவரும் வாக்கிங் சென்றார்களாம். இந்நிலையில் மாலை 3 மணிக்கு வெளியே வந்த அவர்கள் திரும்பவும் வீட்டுக்குள் சென்றுள்ளனர். வீட்டில் வேலை செய்த பெண்ணும் பணியை முடித்துவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு இருவரும் வெளியே வரவில்லை. 5 மணியளவில் பால்காரரும் கதவு திறக்காததால் சென்றுவிட்டார். அதன்பிறகுதான் மகள் பத்மா, பெற்ேறாருக்கு நீண்டநேரமாக போன் செய்யவே இருவரின் போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அருகிலிருந்தவர்களை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியபோதுதான் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

வயதான இருவரும் தனியாக வசித்துவருவதை நோட்டமிட்ட நபர்தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தனியொருவனாக வந்திருக்கலாம் என்றும், அவர்களை கொலை செய்துவிட்டு அங்கிருந்த 4 அரை பவுன் நகை, செல்போன்களை திருடிச்சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மகள் பத்மா அளித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடிவருகின்றனர். குற்றவாளியை கண்டுபிடிக்க டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளிலும், மற்றும் சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்களை கொண்டு புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நகைக்காக இந்த கொடூர கொலையை அரங்கேற்றிய குற்றவாளியை சுட்டுபிடிக்கும் வகையிலும் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

The post ஆசிரியர் தம்பதியை கொன்ற குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படை  5 மாவட்டங்களில் தேடுதல் வேட்டை  தப்பி ஓடியவனை சுட்டு பிடிக்கவும் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: