சென்னை: கடந்த 5 நாட்களாக பெய்த தொடர் மழை நேற்று ஓரளவுக்கு ஓய்ந்து வெயில் அடித்தது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னைப் புறநகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய மாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரண முகாமில் மாம்பாக்கம் மற்றும் மேலக்கோட்டையூர், கீழக்கோட்டையூர் கிராமங்களைச் சேர்ந்த 130 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமை பார்வையிடவும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். முகாமில் இருந்த 29 இருளர் பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை அவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு உணவை வழங்கி அவற்றை ருசி பார்த்தார். பின்னர் கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பி, தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பையனூர் சேகர், மாவட்டக்குழு துணைத்தலைவர் காயத்ரி அன்புச்செழியன், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவர் வீராசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்….
The post மாம்பாக்கத்தில் இருளர்களுக்கு பட்டா முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.