குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி: குற்றாலம் குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குற்றாலம் குற்றாலநாதசுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று காலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியை பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர் தலைமையில் கணேசன் பட்டர், ஜெயமணி சுந்தரம் பட்டர், மகேஷ் பட்டர் ஓதுவார் சங்கரநாராயணன் சிவாச்சாரியார்கள் ஏற்றி வைத்தனர். பின்னர் சிவ பூதகன வாத்தியங்களும் இசக்கப்பட்டன.

தொடர்ந்து திருவிழாவிற்காக இலஞ்சியில் இருந்து திருவிலஞ்சி குமரன் அழைத்து வரும் வைபவம் நடந்தது. விழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், இரவில் ஒவ்வொரு வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. விழாவில் 12ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 13ம் தேதி காலையில் நான்கு தேர்கள் ஓடும் திருத்தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் ஆகிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்படுகிறது. 15ம் தேதி காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராசமூர்த்திக்கு தாண்டவ தீபாரதனை நடக்கிறது. 16ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 18ம் தேதி காலையில் விசு தீர்த்தவாரி நடக்கிறது.

தொடர்ந்து இலஞ்சி திருவிலஞ்சி குமரனுக்கு பிரியா விடை கொடுக்கும் வைபவம் நடக்கிறது. விழாவில் மணியம் சுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், சொக்கம்பட்டி ஜமீன்தார் பெரிய அனஞ்சி தேவர், சின்ன அனஞ்சி தேவர், வம்சாவழி ஊர் பொதுமக்கள் சார்பில் ராஜா மறவன், முருகேசன், சந்தனப் பாண்டியன், செல்வகுமார், முத்து பிரகாஷ், வெள்ளத்துரை, மாரியப்பன், சுப்பையா பாண்டியன், பெரியசாமி, செந்தில்குமார், முருகன், செல்வம், பூசைத்துரை, தங்கபாண்டியன், திருமுருகன், சுடலை, துரைப்பாண்டியன், சுந்தர்ராஜன், பிரான்சிஸ், பால்சாமி, அய்யனார் சாமி, குரு ராஜா, கவாஸ்கர், சந்தோஷ், காசிப்பாண்டியன், திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சுரேஷ், குடியிருப்பு அருண் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, தக்கார் கவிதா, உதவி ஆணையர் கண்ணதாசன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: