குலசை தசரா திருவிழா 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்: வேடப்பொருட்கள் விற்பனை களை கட்டியது

நெல்லை: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வரும் 15ம் தேதி தசரா திருவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், தசரா குழுவினருக்கு தேவையான வேடப்பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா, வருகிற 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்.24ம் தேதி நள்ளிரவு சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடக்கிறது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், வேண்டுதல் வைப்போரும் கோயிலில் காப்பு கட்டி வேடமணிந்து 61, 41, 21, 11 நாட்கள் என அவரவர் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்வர்.

தசரா திருவிழா கொடியேற்றத்திற்குப் பின் திருக்காப்பு அணியும் பக்தர்கள் சிவன், பார்வதி, ராமன், லட்சுமணன், லட்சுமி, சரஸ்வதி, காளி, அட்டகாளி, கருங்காளி, சுடுகாட்டு காளி, குறவன், குறத்தி என பல்வேறு வேடங்கள் அணிவர். இதற்காக குலசேகரன்பட்டினத்தில் ஆங்காங்கே குடில் அமைத்தும், கடைகளிலும் வேடமணியும் பக்தர்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படும். வேடமணியும் பக்தர்கள் அணியும் உடைகள் மற்றும் வேடப்பொருட்களை செய்யும் பணியில் தசரா குழுவில் உள்ளவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர பிளாஸ்டிக்கால் ஆன மண்டை ஓடுகள், காளி கைகள், கிரீடங்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக குவிந்துள்ளன. நீண்ட சடைமுடிகள், ஆஞ்சநேயர் வேடமணியும் பக்தர்களுக்கான சாக்கு உடைகள், அட்டையால் ஆன கதாயுதம், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள், விதவிதமான கிரீடங்கள், உடலில் பூசும் மை போன்றவை தனித்தனியாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விரதமிருக்கும் பக்தர்கள் அணியும் பாசிமணி மாலைகளும் ஏராளமாக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் பகுதி கடைகளிலும் வேடப்பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

The post குலசை தசரா திருவிழா 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்: வேடப்பொருட்கள் விற்பனை களை கட்டியது appeared first on Dinakaran.

Related Stories: