ஆளுநர் ஆர்.என்.ரவி நேரத்தை உருப்படியாக செலவிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் செயல்பட வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் தாக்கு

சென்னை : நாயக்கநேரி ஊராட்சி பட்டியலின தலைவர் பதவியேற்பு குறித்த ஆளுநர் பேச்சுக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி அமைதியை சீர் குலைக்கும் வகையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளராக தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார். சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவைக் கூட படிக்காமல் பட்டியலின தலைவர் பதவியேற்பு பற்றி ஆளுநர் பரப்புரை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் சமூக நீதியால் பிறந்துள்ள அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.

திராவிட மாடல் அரசின் சமூக நீதிக் கொள்கை தமிழ்நாட்டில் பாஜகவுக்கு செல்வாக்கை தர முடியாமல் தடுத்து வைத்துள்ளது. அரசியல் பேச வேண்டும் என்றால் அரசியல் தலைவராக தன்னை மாற்றிக்கொண்டு ஆளுநர் ரவி கருத்து தெரிவிக்கட்டும். உண்மைக்கு மாறான பேச்சுக்களை ஆளுநர் தவிர்க்க வேண்டும். பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள், அரசு நிர்வாகக் கோப்புகளில் கையொப்பமிடுவதில் நேரத்தை செலவிட வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற லஞ்ச வழக்குகளில் கையொப்பமிடாமல் தமிழக ஆளுநர் வைத்துள்ளார். நேரத்தை உருப்படியாக செலவிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆக்கப்பூர்வமாக அவர் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி நேரத்தை உருப்படியாக செலவிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் செயல்பட வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: