ங போல் வளை… யோகம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆயுளும் வயதும்

நாம் மூத்தவர்களைப் பாதம் தொட்டு வணங்கும்போது ‘ நீடுழி வாழ்க ‘ தீர்க்காயுசு ‘ நூறு வருஷம் வாழ்க’ போன்ற நல்வாழ்த்துக்களை பெறுகிறோம். இது எப்படி நம் மரபில், குடும்பத்தில், வழிவழியாக சொல்லப்படுகிறது? எந்த அர்த்தத்தில் இதை நம் முன்னோர்கள் சொல்கிறார்கள் என்பதை சற்று விரிவாக காணலாம். அதை யோகமரபும், ஆயுர்வேதம் போன்ற மரபுகளும் எப்படி அணுகுகிறது,என்பதையும் சற்று யோசிப்போம்.

நாம் பிறந்தது முதல் இன்றுவரையான உடலின் வளர்ச்சியை கடந்த நாட்களை வயது என்றும், மேலும் இருக்கும் வாழ்வை அதன் பல்வேறு தளங்களில் முழுமைத் தன்மையை ‘ஆயுள்’ என்றும் இரண்டாக நமது மரபு வகுக்கிறது.இந்த ஆயுளைப் பற்றி அறிந்துகொள்வதே ஆயுர்வேதம், வெறும் நோய் தீர்ப்பதற்கு பெயர் ஆயுர்வேதமல்ல. யோக உபநிஷத்துக்களும், யோகியரும், உடல் அமைப்பைப் பற்றியோ, உடல் ஆரோக்கியம் பற்றியோ பேசும்பொழுது, ஆயுர்வேதத்தையும், அதன் அளவீடுகளையும் மட்டுமே துணை கொள்கின்றனர்.

அதிலும் ஆயுர்வேதத்தின் முதன்மை நூல்களான, சரக சம்ஹிதை போன்ற நூல்களில் ஆயுள் எனும் கருதுகோளே முதன்மையாகப் பேசப்படுகிறது.இதில் ஆயுளை நான்கு வாழ்வாக பகுத்து , நாம் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு செல்லவேண்டும் என சரகர் தெளிவாக கூறுகிறார். ஆயுர்வேதத்திலிருந்து பெற்றுக்கொண்ட இந்த கருத்தை யோகம், ஹிதம் என்பது ஒருவருடைய பஞ்ச கோஷம் எனும் ஐந்து தளங்களிலும் திகழ வேண்டும், என்கிறது. ஆகவே யோகியானவன் தன் பயிற்சிகளின் மூலம் தன்னிறைவு பெற்ற ஆளாக மட்டுமில்லாமல் தன்னை சுற்றியிருக்கும் அனைத்திலும் அதை வழங்க வேண்டும், என வலியுறுத்துகிறது.

ஆகவே பதஞ்சலி யோகசூத்திரத்திற்கு உரை எழுதிய நவீன யோகியரில் ஒருவரான சுவாமி சச்சிதானந்த சரஸ்வதி அவர்கள், ‘ நாம் இந்த உலகை மாற்றி அமைக்க வேண்டாம் ,தன்னளவில் அடையப்படும் நிறைவும் , மகிழ்ச்சியும் , ஆரோக்கியமும் , இயல்பாகவே, நம்மைச் சுற்றியிருக்கும் சூழலில் பரவக்கூடியது, ஆகவே மகிழ்ந்திருங்கள்,’’என சொல்லிவிட்டு வெறும் தத்துவமாக நிறுத்திவிடாமல் ,சாதனாவில் { யோகப் பயிற்சியில்} நிலைத்திருங்கள், உங்களுக்கு அது அபரிமிதமான ஆற்றலை வழங்கும்.

அதை நீங்கள் உங்கள் சுற்றத்திற்கு வழங்குவீர்கள் என்கிறார். ஆகவே அஹிதம் என்பது ஒருவர் , தொடர்ந்து உடலை சீரமைத்துக்கொண்டே இருத்தல், சரியான உணவை உட்கொள்ளாமல், தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்றை தேர்ந்தெடுத்தல் , மனத ளவில் பல்வேறு கவலைகளை சுமந்து கொண்டே இருத்தல், என தெரிந்தே தனக்குத்தானே தீங்கு விளைவித்துக்கொள்வது. இப்படி இருக்கும் ஒருவரைத்தான் யோகமும் ஆயுர்வேதமும் ‘ஹிதாகார் ‘ எனப்படும் ஹிதமானவர் எனும் நிலைக்கு உயரச்சொல்கிறது.

மூன்றாவதாக சுகாயூ எனும் சுகம் மிக்க வாழ்வு, முதலில் சொல்லப்பட்ட ஹிதத்திற்கும், இந்த சுகத்திற்கும் சில முக்கியமான வேறுபாடுகள் சொல்லப்படுகிறது.
ஹிதம் என்பது ஒரு மனிதன் தனக்கும் தன்னை சார்ந்திருக்கும் அனைத்திற்கும், சமநிலையான இசைந்த வாழ்வை அமைத்துக்கொள்ளுதல்.சுகம் என்பது தன்னளவில் அனைத்தையும் சுகமாக அனுபவித்தல், உதாரணமாக ஒருவர் தன்னுடைய சுகத்திற்காகக் ருசிக்காக,புலன் இன்பத்திற்காக, மதுவை எடுத்துக்கொள்கிறார், படிப்படியாக, குடிப்பழக்கமாக மாறுகிறது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மதுவால் தனது உடல் ஆரோக்கியத்தை இழக்கிறார் , குடும்ப வாழ்வை சிதைக்கிறார், அந்த குடும்பம் சமூகத்திற்கு ஒரு சுமையாக மாறுகிறது, ஆக ஒருவருடைய சுகம் என்பது நாளடைவில் அவரையும் சுற்றி இருக்கும் உலகத்திற்கு ஒருவகை துன்பத்தையே விளைவிக்கிறார்.

சுகமாக இருக்கக்கூடாது என்று ஆயுர்வேதமோ, யோகமோ சொல்லவில்லை, இதற்கான முயற்சி மிகச்சிறிய அளவில் இருக்க வேண்டும் அது தரக்கூடிய சுகம் அதிகமாக இருக்க வேண்டும், நீங்கள் செய்யும் ஒரு சில உடற்பயிற்சி நாள் முழுவதும் சுகமான உடல், மன நிலையை வழங்க வேண்டும், உண்ணும் உணவின் பெரும்பகுதி இந்த உடலில் போஷாக்காக , வலிமையாக , மாறவேண்டும், சரியான உறக்கத்தின் மூலம் உண்டான சுகம் அடுத்த நாள் முழுவதும் ஆற்றலை வழங்க வேண்டும்.

இவையனைத்துமே சுகாயு வாக வாழும் வழிமுறை. உதாரணமாக ஒரு சினிமா பார்க்கிறோம் அது சுகமான ஒன்று, அதே போல தூக்கம் வருகிறது நன்றாக தூங்குகிறோம் அதுவும் சுகமானதுதான், ஆனால் இவையிரண்டும் நம்மை மீறி நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத போது சுகமென்பதே, ஒரு பிரச்சனையாக மாறுகிறது. ஆகவே சுகம் சார்ந்த விஷயங்களை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது, நீண்ட நாட்கள் அல்லது வாழ்நாள் முழுவதும் சுகத்தை அனுபவிக்க முடியும் என்கிற நிலையையே சுகாயு என்கிறது மரபு.

இந்த சுகாயு எனும் நிலைக்கு நேர் எதிர்நிலைதான் ‘ துக்க ஆயு ‘ எனப்படும் துன்பமான வாழ்வு. தொடர்ந்து சலிப்பு ,எரிச்சல் , கவலைச் , சோர்வு என தனக்கும், தன்னை சுற்றி இருப்பவரின் மீதும் போதாமைகள் கொண்டவர். சுகமான ஒன்றை அனுபவித்துக்கொண்டிருக்கும் பொழுதே, அடுத்த சுகம் பற்றிய கவலையை கொண்டவர், கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பதற்றம் கொண்டவர்.

தொடர்ந்து சுகம் சார்ந்த தேடலில் இருப்பவரும், அதே வேளையில் அந்த சுகத்தை அனுபவிக்க முடியாத அளவிற்கு பதற்றமும் கொண்டவர்கள் இன்று ஏராளம். உணவு கூடங்களில், கோயில்களில் , இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேச பயணங்களில், கவனிக்கலாம், சுகம் தேடித்தான் அங்கே செல்கிறோம், ஆனால் அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்கிற பதற்றத்துடனே நடமாடுகிறார்கள் என்பதை கவனிக்கலாம். கண்ணெதிரே சுகமான ஒன்று இருந்தும் அவற்றை முழுமையாக அனுபவிக்க முடியாமை அனைத்துமே துக்கமாக மாறுகிறது. அதற்கான காரணங்கள் மிக விரிவாக பேசப்பட்டுள்ளது.

ஹடயோக பிரதீபிகையில் துன்பத்திற்கான காரணிகளைப் பற்றி பேசுகையில், விக்ஷேபம் எனும் கவனச்சிதறல், கவனமின்மை தரும் பதற்றம்தான் ஒரு சாதகன் முதலில் களைய வேண்டிய விஷம் என்கிறார் சுவாமி ஸ்வாத்மா ராமா.ஆக இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மனிதர்கள் , அஹிதம் எனும் நிலையிலும், துக்காயு எனும் நிலையிலேயே இருக்கின்றனர்.இந்நிலைகளில் இருந்து ஹிதாயு, மற்றும் சுகாயூ எனும் நிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ள, ஒருவர் ஏதேனும் ஒன்றை கண்டடைய வேண்டும்.

இந்த நான்கு நிலைகளையும் ஆராய்ந்து தான் , யோகம் தனக்கான பயிற்சிகளை வரையறை செய்கிறது , இதமான ஒன்று எப்போது அஹிதமாக மாறுகிறது? சுகமான ஒன்று எப்போது துக்கமாக மாறுகிறது? என்பதை அறிந்து அவற்றை கடந்து சென்று நல்வாழ்வு அமைத்துக்கொள்வதற்கு, யோகம் இரண்டு முக்கியமான விஷயங்களை கூறுகிறது, முதலில் சொல்வது பிராணன் எனும் உயிராற்றல்,இரண்டாவது காரணி ‘ நாடிகள்’சுத்திகரிக்கப்பட்ட நாடிகளின் வழியாக மட்டும் சரியான உயிராற்றல் பாய்ந்தோட முடியும். அப்படி செல்லும் பிராணனே முழுமையான வாழ்வளிக்கும்.

ஆகவே, யோகம் வாழ்க்கையை அல்லது வாழ்நாளை நம்முடைய மூச்சின் எண்ணிக்கையை வைத்தே அணுகுகிறது, ஒரு நிமிடத்திற்கு சராசரியாக பன்னிரண்டு முதல் பதினைந்து மூச்சுகள் எனில் ஒரு நாளில் 21600 மூச்சுகள் என நமக்கு மூச்சு எண்ணிக்கையாக, வழங்கப்பட்டுள்ளது. ஹிதமான நிலையில் இந்த எண்ணிக்கை குறைவாகவும் , துக்கமான நிலையில் பலமடங்கு வேகமாகவும் நடைபெறுகிறது. ஆக யோகத்தின் படி ஹிதாகார் என்பவரே இங்கே நீண்ட நாள் வாழமுடியும் எனவும், மூச்சை மையமாக வைத்து செய்யக்கூடிய பயிற்சித் திட்டமே நம்மை முழுமையான ஒருவராக மாற்றும் என்பதும், தெளிவு.

இந்த பகுதியில் ‘‘பஷ்சி முத்தானாசனா’’ எனும் பயிற்சியை காணலாம். அடிவயிற்றுப்பகுதியில் தேங்கியிருக்கும் இறுக்கத்தை நீக்குவதிலும் , ஜீரண மண்டலத்திலும் மிகப்பெரிய அளவில் பலனளிக்கக்கூடியது. கால்கள் நீட்டிய நிலையில் அமர்ந்து முன்புறமாக குனிந்து பெருவிரலை பிடித்துக்கொண்டு தலையை கால் மூட்டுப்பகுதி வரை கொண்டு சென்று சில மூச்சுகள் வரை இருந்து விட்டு பின்னர் நேராக அமரலாம். ஐந்து முதல் எட்டு சுற்றுகள் வரை செய்து பலன்பெறலாம்.

The post ங போல் வளை… யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.

Related Stories: