குமரி முழுவதும் விடிய விடிய கனமழை; பல இடங்களில் மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு: குருந்தன்கோட்டில் 134 மி.மீ மழை பதிவு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 134 மி.மீ மழை பதிவாகியது. குமரி மாட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை கொட்டியது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதில் தாழக்குடி அருகே மீனமங்கலம் காலனியை சேர்ந்த வேலப்பன்(75) என்பவர் வீடு இடிந்து விழுந்து பலியானார். திங்கள்சந்தை அருகே மணவிளை பகுதியில் சாலையின் குறுக்கே தென்னை மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதியினர் திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய பணியாளர்கள் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தென்னை மரம் வெட்டி அகற்றப்பட்டது.

இதேபோல் குருந்தன்கோடு அருகே ஆசாரிவிளை பகுதியில் பெரிய புளியமரம் ஒன்று வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மரத்தையும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். துண்டாக்கப்பட்ட மரம் ஜேசிபி உதவியுடன் சாலையோரம் அப்புறப்படுத்தப்பட்டது.

அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு தாலுகா பகுதிகளில் தலா ஒரு வீடு மழை காரணமாக இடிந்து விழுந்தது. மழை காரணமாக குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. 1 முதல் 5ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மழை காரணமாக 12ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று இயங்காது என்று கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்தார். அதே வேளையில் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்குகிறது.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 29.69 அடியாகும். அணைக்கு 2127 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 331 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தத. பெருஞ்சாணி நீர்மட்டம் 55.80 அடியாகும். அணைக்கு 1939 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. சிற்றார்-1ல் 13.71 அடியாக நீர்மட்டம் உள்ளது.

அணைக்கு 396 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருந்தது. சிற்றார்-2ல் 13.81 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 266 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 9.30 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 11.15 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 28 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 4.60 அடியாகும். அணைக்கு 11.2 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 8.6 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

தென் தமிழக கடல் பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான கடல் பகுதியில் 0.5 மீ முதல் 2.5 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனை போன்று தமிழ்நாடு கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா உள்ளிட்ட இடங்களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், சில வேளையில் 65 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும், எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் பகுதியில் பறக்கின்காலில் மழை வெள்ளம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக இந்த தண்ணீர் பாறைக்காமடம் பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளன. இந்த பகுதியில் சுமார் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு புறம்போக்கு பகுதியில் இந்த வீடுகள் அமையப்பெற்றுள்ளது.

The post குமரி முழுவதும் விடிய விடிய கனமழை; பல இடங்களில் மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு: குருந்தன்கோட்டில் 134 மி.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: