இந்திய திரையுலக வரலாற்றை புரட்டி போட்ட பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்தது எப்படி?.. 5 ஆண்டுகளுக்கு பின் மவுனம் கலைந்த போனி கபூர்

மும்பை: இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, இதுவரை மவுனம் காத்து வந்த அவரது கணவரான தயாரிப்பாளர் போனி கபூர், தற்போது 5 ஆண்டுகளுக்கு பின்னர் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ்நாட்டின் சிவகாசியில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி (54), கடந்த 1967ல் ‘துணைவன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

1996ம் ஆண்டு ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய மகள்கள் உள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது அழகாலும் வசீகரத்தாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை தேவி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி நள்ளிரவில் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றார். ஆனால் ஓட்டல் அறையின் பாத் டேப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது மனைவியின் மரணத்திற்கு பின் அவரது இறப்பு குறித்து இதுவரை எந்த ஒரு தகவல்களையும் பகிர்ந்துகொள்ளாத அவரது கணவர் போனி கபூர், தற்போது இதுகுறித்து பேசியுள்ளார். பிரபல செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல; அது ஒரு தற்செயலான மரணம். விசாரணையின் போது நான் கிட்டத்தட்ட 24 – 48 மணிநேரம் அவரது மரணத்தை பற்றியே பேசிக்கொண்டிருந்ததால், மீண்டும் அதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன். அவரது மரணம் குறித்து இந்திய ஊடகங்களில் இருந்து அதிக அழுத்தம் இருந்ததால், அந்த சம்பவத்தில் இருந்து கடந்து செல்ல வேண்டியிருந்தது. பலகட்ட விசாரணையில் அவரது மரணத்தில், எந்தவிதமான விபரீதமும் நடைபெற வில்லை என்று அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதன்பிறகு உண்மை கண்டறிதல் சோதனைகள் உட்பட அனைத்து சோதனைகளும் நடந்தன. அதன் பின்னர், அவரது மரணம் தற்செயலானது என்று தெளிவாக அறிக்கை வந்தது. ஸ்ரீதேவி இறக்கும் சமயத்திலும் டயட்டில் இருந்தார். அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பிய ஸ்ரீதேவி, கடைசிவரை உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பார். பல நேரங்களில் பட்டினியாக இருப்பார். எனக்கு திருமணம் ஆனதில் இருந்து, அவருக்கு இரண்டு முறை சுயநினைவு இல்லாமல் போனது. குறைந்த ரத்த அழுத்த பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஒருமுறை படப்பிடிப்பின் போது குளியலறையில் ஸ்ரீதேவி மயங்கி விழுந்ததாக, அந்தப் படத்தின் நாயகனான நாகார்ஜுனா கூறினார். அதனால் தான் குளியலறையில் விழுந்து ஸ்ரீதேவிக்கு பல் உடைந்தது.

இரவு உணவின் போது கூட, உப்பு இல்லாத உணவுகளை விரும்பி சாப்பிடுவார். இதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது மரண சம்பவம் நடக்கும் வரை இது மிகவும் தீவிரமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

The post இந்திய திரையுலக வரலாற்றை புரட்டி போட்ட பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்தது எப்படி?.. 5 ஆண்டுகளுக்கு பின் மவுனம் கலைந்த போனி கபூர் appeared first on Dinakaran.

Related Stories: