இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கடலூர் அடுத்த பெரிய காட்டுப்பாளையம் என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது, சாலையில் உள்ள சென்டர் மீடியன் கட்டையில் லாரியின் டீசல் டேங்க் உரசியதாக தெரிகிறது. இதில் டீசல் டேங்க் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த டிரைவர் பிரபாகரன் உடனடியாக லாரியை ஓரம்கட்டி நிறுத்தி வேகமாக இறங்கி தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு துறை வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்த தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். இதில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள சிமெண்ட் மூட்டைகள் எரிந்து சேதமடைந்ததாக தெரிகிறது.
லாரி தீப்பிடித்து எரிய துவங்கியபோது அருகில் பேருந்து நிறுத்தத்தில் ஏராளமான பொதுமக்கள் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக டிரைவர் சாமர்த்தியமாக 50 அடி தூரம் தள்ளி லாரியை நிறுத்தி தப்பிவிட்டார். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் கடலூர் புதுச்சேரி இடையே சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post கடலூர் அருகே நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.