பார்வையை இழக்க செய்யும் குளுக்கோமா!

நன்றி குங்குமம் தோழி

கண் அழுத்த நோய் (குளுக்கோமா) என்பது, கண்களுக்கு நிரந்தர சேதத்தை விளைவிக்கின்ற, குணப்படுத்த இயலாத கண் நோய்களுள் ஒன்றாகும். கண்ணுக்குள்ளே உருவாக்கப்படுகிற அதிகரித்த அழுத்தத்தின் காரணமாக இச்சேதம் ஏற்படுகிறது. மூளைக்கு உருவங்களை எடுத்து அனுப்புகின்ற கண்ணின் பார்வை நரம்பை இது சேதப்படுத்துகிறது. இயல்பான கண் அழுத்தத்தைக் கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் கூட கண் அழுத்த நோய் உருவாகக்கூடும். இது, இயல்பான அழுத்த குளுக்கோமா என அழைக்கப்படுகிறது என்கிறார் கண் சிகிச்சை மருத்துவர் டாக்டர் ரதி மலர் ஆனந்த்கண் அழுத்த நோயானது, வயதான முதியவர்களை மட்டுமே பாதிக்கின்ற நோய் என்ற தவறான கண்ணோட்டத்தில் பெரும்பாலான நபர்கள் இருக்கின்றனர்.

ஆனால், அனைத்து வயதினரையும் இந்த நோய் பாதிக்கக்கூடும். பிறக்கின்ற ஒவ்வொரு 10,000 குழந்தைகளுள் 1 குழந்தை கண் அழுத்த நோய் பிரச்சனையோடு பிறக்கிறது. அவ்வாறு கண் அழுத்த நோயோடு பிறக்கும் பெரும்பாலான நபர்களுக்கு அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு, குறிப்பாக வாழ்க்கையின் பிற்பகுதியில் தான் இந்நோயின் பாதிப்பு வெளிப்படுகிறது.

குழந்தைப் பருவ கண் அழுத்த நோய்

மரபு ரீதியான பிறவிநிலை அல்லது குழந்தைப் பருவ கண் அழுத்த நோய் என்பது, குழந்தைகளை அவர்களது வாழ்க்கையின் மிக முந்தைய நிலையிலேயே பாதிக்கின்ற ஒரு வகை கண் அழுத்த நோயாகும். இந்த பாதிப்பு நிலையானது. குழந்தையின் பெற்றோர்கள், முன்னோர்களிடமிருந்து மரபு ரீதியாக பெறப்பட்டதாக இருக்கலாம். கண்ணின் வெளியேற்றல் அமைப்பு முறை தவறாக உருவாகியிருப்பதன் காரணமாக இது ஏற்பட்டிருக்கக்கூடும்.

பிற கண் நோய்களைப் போலல்லாமல், கண் அழுத்த நோயானது, கடுமையான கண் சேதத்தை விளைவிக்கும். ஏனெனில். இந்நோய் பாதிப்பின் காரணமாக, பாதிப்படைபவர்கள் அவர்களது பார்வைத்திறனை நிரந்தரமாக இழந்துவிடுவார்கள். பார்வைத்திறனை அவர்களால் மீண்டும் திரும்பப்பெற இயலாது. குழந்தை பிறக்கும் முன் கண்களின் வெளியேற்ற அமைப்பு சரியற்ற முறையில் உருவாவதே கண் அழுத்த நோயின் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

பிறவிநிலை கண் அழுத்த நோய்

இந்த நோயில் இரு வகைகள் உள்ளன.

*முதன்மை (பிரைமரி) குழந்தைப்பருவ கண் அழுத்த நோய் (PCG) பிசிஜி நிலையோடு பிறந்திருக்கிற குழந்தைகள் பொதுவாகவே விரிவடைந்த பெரிய கண்களையும் மற்றும் கருவிழியில் மங்கலான தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள்.

*இரண்டாம் நிலை (செகண்டரி) குழந்தைப்பருவ கண் அழுத்த நோய் பிறவி நிலை கோளாறுகள், கண்ணில் காயம் அல்லது பிற நோய்களின் காரணமாக இது ஏற்படக்கூடும்.
குழந்தைப்பருவ கண்அழுத்த நோய் என்பது, மிகத்தீவிரமான மற்றும் அரிதான கண் நோயாகும். இந்நோய் பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை அறிந்திருப்பது, ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிவதற்கு உதவும்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

பெரும்பாலான நேரங்களில் இந்நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரியாது. சிலருக்கு வெளிச்சத்தைப் பார்க்க கண் கூசுவது, விரிவடைந்த பெரிய விழிகள், மங்கலான படலத்தைக் கொண்ட கருவிழிகள் போன்ற அறிகுறிகள் இருக்கக்கூடும். கண்ணில் எரிச்சல், பசி உணர்வின்மை மற்றும் விளிம்பு நிலைகளில் பார்வைத்திறன் இழப்பு போன்றவை இரண்டாம் நிலை அறிகுறிகளாகும்.

சிகிச்சை முறைகள்

குழந்தைப் பருவ கண் அழுத்த நோய்க்கு மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சை ஆகிய இருமுறைகள் வழியாகவும், சிகிச்சை அளிக்கலாம். மாத்திரைகள் மற்றும் கண் சொட்டு மருந்துகள் ஆகியவை மருத்துவ சிகிச்சை முறையில் உள்ளடங்குபவை. கண்களுக்குள் இருக்கின்ற அழுத்தத்தை குறைப்பதே இந்த சிகிச்சையின் பிரதான நோக்கமாகும். கண்களிலிருந்து திரவப்போக்கை இது அதிகரிக்கக்கூடும் அல்லது அதன் போக்கை குறைக்கக்கூடும். கண் சொட்டு மருந்துகள், கண் அழுத்தத்தைக் குறைக்கும் என்றாலும் குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டுமே இது பயன்படும்.

அறுவை சிகிச்சை வழிமுறையில் இரு முக்கிய வகைகள் இருக்கின்றன. வடிகட்டல் (ஃபில்ட்டரேஷன்) அறுவைசிகிச்சை மற்றும் லேசர் அறுவைசிகிச்சை. பில்ட்ரேஷன் அறுவை சிகிச்சையில், அளவுக்கதிகமாக சேர்கின்ற திரவத்தை வெளியேற்றுவதற்காக ஒரு வழி உருவாக்கப்படும். இந்த நோயினை முற்றிலும் குணப்படுத்த இயலாது. எனினும் அதைக் கட்டுப்படுத்த இயலும். ஆரம்ப நிலையிலேயே இந்நோய் பாதிப்பைக் கண்டறிவதால், பார்வைத்திறனை இழப்பதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும்.

பாதிப்பு அறிகுறிகள் இல்லாமல் வழக்கமான ஒரு கண் பரிசோதனையை செய்துகொள்ள அநேக மக்கள் செல்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும். பிற கண் நோய்கள்/ கோளாறுகளில், சிகிச்சையின் மூலம் பார்வைத்திறனை திரும்பவும் கொண்டுவர முடியும். ஆனால் குளுக்கோமா என்ற கண் அழுத்த நோயில் அவ்வாறு செய்ய இயலாது. கண்அழுத்த நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க செய்வதற்கான அவசியம் அதிக அளவில் தற்போது இருக்கிறது. இந்த விழிப்புணர்வை பரப்புவதற்கான கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

தொகுப்பு: நிஷா

The post பார்வையை இழக்க செய்யும் குளுக்கோமா! appeared first on Dinakaran.

Related Stories: