திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் இயற்கை சீற்றம், வனவிலங்குகளால் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருத்தணி: திருத்தணி, திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல், வேர்க்கடலை, கரும்பு, மிளகாய், கம்பு, எள்ளு, மல்லி, சாமந்தி, ரோஜா, ஜாதி மல்லி உள்ளிட்டவை பயிர் செய்துவருகின்றனர். இவற்றை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்கின்றனர். இந்த நிலையில், இயற்கையால் மழை பெய்து அறுவடை நேரங்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைகின்றன. பூக்கள் அறுவடை நேரங்களில் மழை பெய்தால் செடிகள் கருகிவிடுகின்றன.

இதனால் விவசாயிகள் மகசூலை ஈட்ட முடியாமல் நஷ்டம் அடைகின்றனர். கரும்பு அறுவடை நேரங்களில் மழை பெய்தால் நிலத்தில் இருந்து கரும்புகளை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படுவதுடன் கூடுதல் செலவு செய்யவேண்டியது உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இயற்கையால் பாதிப்பு ஒருபக்கம் என்றால், காட்டுப்பன்றிகள், குருவிகள் மற்றும் எலிகளால் பயிர்கள் சேதம் அடைகின்றன. கரும்பு, வேர்க்கடலை மற்றும் நெற்கதிர்களை காட்டுப்பன்றிகள் தின்று சேதப்படுத்தி விடுகிறது. இதனால் பல லட்சம் கடன்வாங்கி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

மேலும் நெல் பயிர்கள் அறுவடை நேரத்தில் குருவிகள் வந்து நெல்மணிகளை உணவாக எடுத்துக்கொண்டு சென்று விடுகின்றன. எலிகள் பயிர்களை கடித்து வளர விடாமல் செய்துவிடுகிறது. இவ்வாறாகா பல இடர்பாடுகளில் சிக்கி விவசாயிகள் தவிக்கின்றனர். இப்படியாக இயற்கை ஒரு பக்கம், வன விலங்குகள், பறவைகள் ஒருபக்கம் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயி பணியை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு பெரும்பாலான விவசாயிகள் வந்துவிட்டனர். எனவே, இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

இழப்பீடு கிடைப்பது இல்லை
விவசாயிகள் ஒவ்வொருவரும் தற்போது அரசு அறிவித்துள்ள பயிர் காப்பீடுகளை செய்கின்றனர். காப்பீடு செய்யப்பட்டாலும் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை. குறுவட்ட அளவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரண தொகையை அரசு அறிவிக்கிறது. எனவே அரசாங்கம் தனிநபர் விவசாய காப்பீட்டுக்கும் உரிய ஏற்பட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் விவசாயிகள் தொடர் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும். ஒன்றிய, மாநில அரசு விவசாயிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி விவசாயிகளை பாதுகாக்கின்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விவசாயம் அழிந்துவிடும் நிலைமைக்கு சென்றுவிடும்.

The post திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் இயற்கை சீற்றம், வனவிலங்குகளால் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: