அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருப்பதால், அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் மருத்துவக் கல்விக் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய நிலையில் மருத்துவ ஆணையத்தின் புதிய விதி மிகவும் பிற்போக்கானது.
2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள்தொகை 7.23 கோடி ஆகும். 2021ம் ஆண்டில் இது 7.64 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மக்கள்தொகைக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க முடியாது. புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென்மாநிலங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்.
அதிகளவில் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டால், எதிர்காலத்தில் மருத்துவர்களுக்கு வேலை கிடைக்காது என்பதால் தான் இந்த புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது. இது அபத்தமானது. தமிழ்நாட்டில் 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருந்தாலும்கூட, அந்த இடங்கள் அனைத்திலும் படிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும், வட மாநிலங்கள் அனைத்தும் மருத்துவக் கல்வி வழங்குவதில் இன்னும் பின்தங்கி தான் உள்ளன. அங்கு மருத்துவர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
அதனால், தமிழகத்தில் பயிலும் மருத்துவ மாணவர்கள், பிற மாநிலங்களில் சேவையாற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் கட்டுப்பாட்டை விதிப்பது அபத்தமானது. ஒரு மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான கட்டுப்பாடுகளை விதிப்பதும், அதற்கு ஒன்றிய அரசு உடந்தையாக இருப்பதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானவை.
The post கூட்டாட்சிக்கு ஆபத்து appeared first on Dinakaran.