விஷேச நாட்கள் இல்லாததால் வாழை இலை விலை குறைந்தது: 1 கட்டு ரூ.600ஆக சரிந்தது


பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று, வாழை இலை வரத்து குறைவாக இருந்ததுடன் விஷேச நாட்கள் இல்லாததால் 1 கட்டு ரூ.600 ஆக சரிந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு ஆனைமலை, கோட்டூர், அம்பராம்பாளையம் சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமின்றி பழனி, ஒட்டன் சத்திரம், தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வாழைத்தார் மற்றும் இலைக்கட்டுகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம் இறுதியில் வாழை இலைக்கட்டு வரத்து அதிகமாக இருந்தாலும், திருமண விஷேச நாட்கள் இருந்ததால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மாதம் துவக்கத்தில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வாழை இலைக்கட்டுகள் அதிகளவு கொண்டு வரப்பட்டிருந்தாலும், அந்நேரத்தில் சுப முகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்பதால், இலைக்கட்டுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு 100 எண்ணம் கொண்ட ஒரு இலைக்கட்டு ரூ.3,500 வரை ஏலம் போனது. ஆனால், கடந்த வாரத்துக்கு முன்பிருந்தே புரட்டாசி மாதம் துவக்கத்தாலும், சுப முகூர்த்த விஷேச நாட்கள் இல்லாததாலும், தேர்நிலை மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது. இதில் நேற்று வாழை இலை விற்பனை மந்தமாக இருந்தது. மேலும், 1 கட்டு ரூ.600 முதல் அதிகபட்சமாக ரூ.700 வரை என குறைவான விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post விஷேச நாட்கள் இல்லாததால் வாழை இலை விலை குறைந்தது: 1 கட்டு ரூ.600ஆக சரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: