குத்துப்பாட்டு தொடர்பான பிரச்னையில் பள்ளியில் அடிதடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய மாணவர்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும்: காந்தி, காமராஜர், அப்துல்கலாம் பற்றி குறிப்பு எழுத வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: பள்ளி நிகழ்ச்சியின்போது குத்துப்பாட்டு தொடர்பான பிரச்னையில் மாணவர்களிடையே நடந்த அடிதடி தொடர்பான வழக்கில், முன்ஜாமீன் நிபந்தனையாக மாணவர்கள் வகுப்பறைகளை ஒரு வாரத்திற்கு சுத்தம் ெசய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது 10 வகுப்பு மாணவர்களுக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே குத்துப்பாட்டு போடுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, 12ம் வகுப்பு மாணவர்களை 10ம் வகுப்பு மாணவர்கள் தள்ளியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மறுநாள் 10ம் வகுப்பு மாணவர்கள் படித்துக்கொண்டிருந்த வகுப்பறைக்குள் சென்ற 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களை தள்ளிவிட்ட மாணவர்களை தாக்கியுள்ளனர். பள்ளி வாட்ச்மேனையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 10 மாணவர்களும், ஆசிரியர்களும் காயமடைந்தனர். மறுநாள் காயமடைந்த மாணவர்கள் பள்ளி அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்காடு போலீசார் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அனுமதியில்லாமல் நுழைதல், சிறு காயம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளிலும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி 4 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், சி.அய்யப்பராஜ் ஆகியோரும் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் லியோனார்ட் அருள் ஜோசப் செல்வமும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவில், ‘‘கல்வி என்பது அறிவை பெறுவதற்கான ஒரு தளம். அங்கு பொருளாதார ரீதியில் மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் காமராஜ் சீருடை திட்டத்தை கொண்டுவந்தார்.

தற்போதுள்ள ஆன்லைன் கல்வி தோல்வியடைந்ததாகவே கருத வேண்டும். மாணவர்கள் நேரடியாக ஆசிரியர்களிடம் பள்ளியில் கற்கும் முறைதான் சிறந்தது. அதற்கு மாற்றாக எந்த கல்வி முறை வந்தாலும், அதனால் சிறந்த முடிவை தர முடியாது. இந்த வழக்கில் பள்ளியில் குத்துப்பாட்டுக்காக 10ம் வகுப்பு மாணவர்களும் 12ம் வகுப்பு மாணவர்களும் மோதிக்கொண்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சி தேவையா என்பதை பள்ளி நிர்வாகத்திடம் விட்டுவிடுகிறேன். இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு கீழ்கண்ட நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் தலா ரூ.1000க்கான உத்தரவாத பத்திரம் தரவேண்டும்.

ஒவ்வொரும் தினமும் 4 வகுப்பறைகளை கரும் பலகை, மேஜை, பெஞ்ச், தரை ஆகியவற்றை ஒரு வாரத்திற்கு சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி நூலகத்திற்கு சென்று காந்தியின் சத்திய சோதனை, காமராஜரின் கல்வி திட்டங்கள், அணு விஞ்ஞானி அப்துல்கலாமின் கனவு ஆகியவை குறித்த குறிப்புகளை கையெழுத்தில் எழுதி பள்ளி முதல்வரிடம் தர வேண்டும். பள்ளி முதல்வர் அந்த குறிப்புகளை ஒரு ஆண்டுக்கு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மனுதாரர்கள் இந்த குறிப்புகளை கூகுளில் தேடி தகவல்களை வெட்டி ஒட்டக்கூடாது. மனுதாரர்கள் பள்ளியின் பெயரில் தலா ரூ.2 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகள் அமல்படுத்தப்பட்டது குறித்து பள்ளி முதல்வர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

The post குத்துப்பாட்டு தொடர்பான பிரச்னையில் பள்ளியில் அடிதடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய மாணவர்கள் வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும்: காந்தி, காமராஜர், அப்துல்கலாம் பற்றி குறிப்பு எழுத வேண்டும்; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: