அதனைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டில் (2022-23) 8 ஆயிரத்து 719 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் (2023-24) 10 ஆயிரத்து 81 மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் சேர இடங்களை உறுதி செய்துள்ளனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்ஜினியரிங் கட்டணமாக ரூ.85 ஆயிரம் வரை அரசு செலுத்துகிறது. நடப்பாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அந்தந்த கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) இறுதிக்குள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இதுவரை சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு கட்டணம் முறையாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான தேர்வு கட்டணம் இதில் அடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்தந்த கல்லூரிகள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று மாணவர்களை நிர்ப்பந்திப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு புகார்கள் வந்திருக்கிறது. தொழில்நுட்ப கல்வி இயக்ககமும், அரசுக்கு இதுபற்றி தெளிவுப்படுத்த பரிந்துரை கடிதத்தை அனுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் நடப்பாண்டில் சேர்ந்து இருக்கும் மாணவர்களிடம் சில கல்லூரிகள், அரசு கட்டணத்தை செலுத்தினாலும், சிலவற்றுக்கான கட்டணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என வலியுறுத்துவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அந்தந்த கல்லூரிகளை தொடர்பு கொண்டு தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் அவ்வாறு எந்த கட்டணத்தையும் செலுத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், அரசு தன் பணியை சரியாகத்தான் செய்கிறது. ஆனால் அனைத்தையும் இலவசமாக கொடுத்து விட்டால் மாணவர்களுக்கு எல்லாம் எளிதாகி விடும். கஷ்டபட்டு கட்டணத்தை செலுத்தும் எண்ணம் அவர்கள் மனதில் பதிந்தால்தான் அவர்களால் அனைத்தையும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள முடியும். எனவே 50 சதவிகித கட்டணத்தையாவது 7.5 சதவீத மாணவர்களை செலுத்த சொல்லாம். அப்போதுதான் அதன் முக்கியத்துவம் அவர்களுக்கு புரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post 7.5% ஒதுக்கீட்டு சீட் பெற்ற இன்ஜினியரிங் மாணவர்களிடம் கட்டாய தேர்வு கட்டணம் வசூலிப்பு: தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் புகார்கள் வருவதாக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.