தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 1000 இடங்களில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 2,972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து தினசரி காய்ச்சல் கண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, கிராமம் மற்றும் நகரங்கள் வாரியாக பட்டியல் தயார் செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு நோய்த் தடுப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 23,717 தினசரி தற்காலிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள் பரிசோதனை கருவிகள், ரத்த கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை மருந்துகளான நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு போன்றவை தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள சுமார் 17லட்சம் வீடுகளின் பகுதிகளை சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு அழிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக 318 மருத்துவ அலுவலர்கள், 635 செவிலியர்கள், 954 கொசு ஒழிப்புக்கென நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,324 ஒப்பந்த பணியாளர்கள் என ஆக மொத்தம் 4,231 மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் டெங்குவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் 363 பேர் இதில், சென்னையில் மட்டும் 54 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1000 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. சென்னையில் இன்று காலை 9 மணிக்கு மயிலாப்பூர் சீனிவாசபுரம் பகுதியில் நடைபெறும் முகாமை நானும் துறையின் செயலாளரும் தொடங்கி வைக்கவுள்ளோம் என்றார்.

The post தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: