பூத்தில் உட்காரக்கூட பாஜவுக்கு ஆள் இல்லை அண்ணாமலையை முதல்வராக்க டார்ச்சரால் கூட்டணி துண்டிப்பு: மாஜி அதிமுக அமைச்சர் பகீர் தகவல்

பவானி: அண்ணாமலையை முதலமைச்சராக்க வலியுறுத்தியதால், பூத்தில் உட்காரக்கூட ஆள் இல்லாத பாஜ கூட்டணியில் இருந்து விலகினோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ கூறினார். ஈரோடு மாவட்டம், பவானியில் நேற்று முன்தினம் இரவு நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ பேசியதாவது: பாஜ தலைவர் அண்ணாமலை சின்ன பையன். என்னை விட 20 வயது குறைவு. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விட 30 ஆண்டுகள் வயது குறைவானவர். அவரது அரசியல் அனுபவம் கூட இவரது வயது கிடையாது. ஆனால், பாஜ தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியோரை மோசமாக விமர்சித்து பேசுகிறார்கள். எதற்கும் ஒரு எல்லை உண்டு.

குடும்ப தலைவியாக இருந்தாலும், குடும்ப தலைவருடன் சில கருத்து வேறுபாடு இருந்தால், ஓரளவுக்குத்தான் தாங்க முடியும். முதலாளியாக இருந்தாலும் தொழிலாளியால் ஓரளவுக்குத்தான் இறங்கிச்செல்ல முடியும். அதற்கு மேல் தாங்க முடியாது. பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என்று சொன்னதற்கான காரணம் தெரியுமா? வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது மோடி மீண்டும் பிரதமராக அதிமுக ஆதரவளிக்க வேண்டுமாம். 2026ல் வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க ஆதரவு அளிக்க வேண்டுமாம்.

இப்படி கூறும் பாஜவுடன் மீண்டும் கூட்டணி வைக்க முடியாது. பூத்தில் உட்காரக்கூட ஆட்கள் இல்லாத பாஜவுக்கு, 2.5 கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுக ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும். இதனால், பாஜவுடன் கூட்டணி துண்டிக்கப்பட்டது. பாஜ கூட்டணி வேண்டாம் என்பதற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால், தொழில் நஷ்டம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு கருப்பணன் பேசினார்.

The post பூத்தில் உட்காரக்கூட பாஜவுக்கு ஆள் இல்லை அண்ணாமலையை முதல்வராக்க டார்ச்சரால் கூட்டணி துண்டிப்பு: மாஜி அதிமுக அமைச்சர் பகீர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: