நில குத்தகை பாக்கி ரூ.168 கோடியை 4 வாரங்களில் செலுத்த வேண்டும்: ஸ்பிக் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உர தொழிற்சாலைக்கு பயன்படுத்திய அரசு நிலத்துக்கு 1975 முதல் 2008 வரை குத்தகை தொகை 168 கோடியே 73 லட்சத்து 96,880 ரூபாயை நான்கு வாரங்களில் செலுத்தும்படி ஸ்பிக் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள முள்ளக்காடு கிராமத்தில் ஸ்பிக் நிறுவனம் உரத் தொழிற்சாலை கழிவுகளை தேக்கி வைக்க குத்தகை அடிப்படையில் 108 ஏக்கர் அரசு நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அரசு நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற கொள்கை முடிவின்படி நிலத்தை குத்தகைக்கு எடுப்பது தொடர்பாக ஸ்பிக் நிறுவனத்தின் ஒப்புதலை தெரிவிக்க கூறி அரசு தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு ஒப்புதல் தெரிவிக்காத ஸ்பிக் நிறுவனம், நிலத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி அரசுக்கு விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பம் நிலுவையில் இருந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட 108 ஏக்கர் நிலத்துக்கும் அதிகமாக 415 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி வருவதாகக் கூறி 1975 முதல் 2008 வரையிலான காலத்துக்கு, 168 கோடியே 73 லட்சத்து 96,880 ரூபாயை குத்தகையாக செலுத்தும்படி ஸ்பிக் நிறுவனத்துக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது. இத்தொகையை செலுத்தாவிட்டால் நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து ஸ்பிக் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெருமளவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால், அரசு கோரிய குத்தகை தொகையை நான்கு வாரங்களில் ஸ்பிக் நிறுவனம் செலுத்த வேண்டும். விவசாயத்துக்கு தேவையான உரத்தை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்துக்கு தேவைப்படும் நிலத்துக்கு அந்த நிறுவனத்துடன் அரசு குத்தகை ஒப்பந்தம் செய்ய வேண்டும். மீதமுள்ள நிலத்தை மீட்டு பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

2008ம் ஆண்டுக்கு முந்தைய காலத்துக்கான குத்தகை பாக்கியை கணக்கிட்டு ஸ்பிக் நிறுவனத்துக்கு அரசு தெரிவிக்க வேண்டும். அந்த நோட்டீசைப் பெற்ற நான்கு வாரங்களில் தொகையை ஸ்பிக் நிறுவனம் செலுத்த வேண்டும். குறித்த காலத்துக்குள் இத்தொகையை செலுத்தாவிட்டால், அதை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து 2024 ஜனவரி 24ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post நில குத்தகை பாக்கி ரூ.168 கோடியை 4 வாரங்களில் செலுத்த வேண்டும்: ஸ்பிக் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: