அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணம் நிர்ணயிக்க சிறப்பு செயலாளர் நியமனம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: 2006 முதல் 2011ம் அண்டு வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றிய எஸ்.ராமசாமிக்கு வழங்க வேண்டிய கட்டணம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாயை 2 வாரங்களில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து 2012ம் ஆண்டு தலைமை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை செப்டம்பர் 29ம் தேதிக்குள் நியமிக்காவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டி வரும் என்று எச்சரித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ்பாபு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை வழங்குவதற்காக சிறப்பு செயலாளராக பொதுத்துறை செயலாளரை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை உடனுக்குடன் வழங்குவதற்காக ஒவ்வொரு துறையிலும் துணைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறி தலைமைச் செயலாளரின் சார்பில் மனுவை தாக்கல் செய்தார். மனுவில், மாதந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் செயல்பாடுகளை பொறுத்து, மேற்கொண்டு மறுஆய்வுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த நடைமுறையை அடுத்த மூன்று மாதங்களுக்கு செயல்படுத்தலாம். அதன் பின் இந்த புதிய நடைமுறையின் செயல்பாடு அடிப்படையில் மறு ஆய்வு செய்யலாம் என்று தெரிவித்து விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணம் நிர்ணயிக்க சிறப்பு செயலாளர் நியமனம்: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: