செப்.30 காலக்கெடு முடிந்ததால் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அக்.7 வரை அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: ரிசர்வ் வங்கி தடை விதித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்.7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி புதிதாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த மே மாதம் 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. மேலும் கையில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளிலும், ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளிலும் கொடுத்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் கையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர்.

இதற்காக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் பொதுமக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைகொடுத்தால் வாங்க வேண்டாம் என்று பல்வேறு நிறுவனங்கள் அறிவுறுத்தி இருந்தன. இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்து உள்ளது. வரும் 7ம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் கையில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 8ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய, மாற்றுவதற்கான நடைமுறையையும் ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

அதன்விவரம் வருமாறு:
* 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகளில் டெபாசிட் அல்லது பரிமாற்றம் செய்வது நிறுத்தப்படும்.
* ஆனால் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை தனிநபர்கள் தொடர்ந்து மாற்றிக்கொள்ளலாம். ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை அவர்கள் மாற்றிக்கொள்ள முடியும்
* தனிநபர்கள், நிறுவனங்கள் 19 ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தபால் மூலம் அனுப்பலாம், இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க 19 ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களின் ஏதேனும் ஒரு முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
* நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க முகமைகள், அரசுத் துறைகள் அல்லது விசாரணை நடவடிக்கைகள் அல்லது அமலாக்கத்தில் ஈடுபட்டுள்ள பிற பொது அதிகாரங்கள் அதன் 19 ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் எந்த வரம்பும் இன்றி ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
* 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கதாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மே 19 அன்று, மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடி மதிப்புடைய ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
* செப்டம்பர் 29ம் தேதி நிலவரப்படி வங்கிகளுக்கு ரூ.3.42 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் வந்துள்ளன. அதாவது 14 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே இன்னும் புழக்கத்தில் உள்ளன.
* மே 19ம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 96 சதவீதம் திரும்பி வந்துவிட்டது.

The post செப்.30 காலக்கெடு முடிந்ததால் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அக்.7 வரை அவகாசம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: