எதிர்பாராமல் கடலில் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1 கோடி சுழல் நிதி

சென்னை: எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.1 கோடி கொண்டு சுழல் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எந்த வருமானமும் இன்றி வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்லும் நிலையில் உள்ளதால், மீனவர் நலனில் அக்கறை கொண்டுள்ளது தமிழக அரசு.

அந்த மீனவர்களின் துயர் துடைக்க சுழல் நிதியினை உருவாக்கி அதிலிருந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கும் பட்சத்தில் வாழ்வாதாரம், பொருளாதார ரீதியாக மேம்படுத்திக் கொள்ள பேருதவியாக அமையும். அதன்படி, 2016 முதல் 2021ம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கிட ரூ.50 லட்சமும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்காக ரூ.50 லட்சமும் ஆக மொத்தம் ரூ.1 கோடி கொண்டு சுழல் நிதி உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post எதிர்பாராமல் கடலில் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.1 கோடி சுழல் நிதி appeared first on Dinakaran.

Related Stories: