காஞ்சிபுரம், செப். 30: காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ₹6 லட்சம் மதிப்பில் பயிர்க்கடனை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார்.
மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு, அதுகாரிகள் அறிவுறுத்தினர். பின்னர், கலெக்டர் கலைச்செல்வி மோகன், விவசாயிகளுக்கான வேளாண் நலத்திட்டங்கள் குறித்த கையேட்டினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து, கூட்டுறவு துறை சார்பில் 10 விவசாய பயனாளிகளுக்கு ₹6 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒரு விவசாய பயனாளிக்கு விசை தெளிப்பான், ஒரு விவசாய பயனாளிக்கு உயிர் உரங்கள், 3 விவசாய பயனாளிகளுக்கு ₹120 மதிப்பிலான தென்னங்கன்றுகளும் மற்றும் வேளாண் இடுப்பொருட்களை வழங்கினார்.
முன்னதாக, பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவினையொட்டி, கலெக்டர் தலைமையில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுரேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெய, அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post காஞ்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் பயனாளிகளுக்கு ₹6 லட்சம் பயிர் கடன்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.
