பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியதால் அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் குழப்பம்: எந்த அணியை தேர்வு செய்வது என தெரியாமல் தவிப்பு

சென்னை: பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதாக கடந்த திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் இந்த கூட்டணிக்கு மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. அதனால் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தையும் நீக்கிவிட்டு, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை அறிவித்து விட்டார்.

ஆனாலும், அதிமுக தொண்டர்கள் எடப்பாடியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தெளிவாக தெரிந்தது. அங்கு சுமார் 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ் (ஜி.கே.வாசன்), புதிய தமிழகம் (கிருஷ்ணசாமி), புதிய நீதிக்கட்சி (ஏ.சி.சண்முகம்), தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (ஜான்பாண்டி) ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் அல்லது பாஜவுடன் சேருவதா என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளனர். இதில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பூவை ஜெகன்மூர்த்தி மட்டும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மற்ற கட்சிகள் இன்னும் வெளிப்படையாக தங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை. இதில் ஒன்று, இரண்டு கட்சிகளுக்கு சட்டமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிட அதிமுக வாய்ப்பு அளித்து வந்துள்ளது. அதனால், 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் இந்த கட்சிகளுக்கு ஒரு பிரச்னை இல்லை. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக – பாஜ கூட்டணி மீண்டும் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றார். இதனால் அவர் ஒரு முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவாகியுள்ளது. அதேபோன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனது நிலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இவர் பாஜ மற்றும் அதிமுக தலைவர்களுடன் இன்னும் நெருக்கமாகவே
உள்ளார்.

புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் மற்றும் புதிதாக ஆதரவு தெரிவித்துள்ள இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனது முடிவை அறிவிக்கவில்லை. பாரிவேந்தர் பாஜ தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதால் பாஜவுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. ஏ.சி.சண்முகமும் இரண்டு கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பதால் தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் எப்படியாவது ஒரு எம்பி பதவியில் வெற்றிபெற வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளனர். அதேநேரம் தற்போதுள்ள நிலையில் எந்த அணிக்கு சென்றால் வெற்றிபெற முடியும் என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில்தான், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ‘பாஜ தேசிய தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர்கள் கூட்டணி குறித்து ஒரு முடிவு எடுத்து அறிவித்த பிறகே எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம்’ என்று கூறியுள்ளார். அதேபோன்று, அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, ‘இனி எப்போதும் பாஜவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று கூறியுள்ளார். அதனால், தமிழகத்தில் பாஜ தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது அதிமுகவில் உள்ள சிறிய கட்சிகள், எடப்பாடி அணியில் இருந்து விலகி பாஜ பக்கம் செல்வதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியதால் அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் குழப்பம்: எந்த அணியை தேர்வு செய்வது என தெரியாமல் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: