டாஸ்மாக் கடைகளில் மது விலையை உயர்த்த திட்டம்

சென்னை: குவாட்டருக்கு ரூ.5, ஆஃப் ரூ.10 என டாஸ்மாக் கடைகளில் மது வகைகளின் விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த முறை, 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மதுபானங்களின் விலை பிராண்டுகளுக்கு ஏற்ப, ரூ.80 வரை உயர்த்தப்பட்டது. மேலும் ஜூலை 2023ம் ஆண்டு மாநில அரசால் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானத்தின் விலை பிராண்ட் மற்றும் அளவுக்கேற்ப ஒரு பாட்டிலுக்கு ரூ.10லிருந்து ரூ.320ஆக உயர்த்தப்பட்டது. அண்மையில் நடந்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான மதுபானங்களின் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

2022ம் ஆண்டை போல இந்த முறை விலை உயர்வு அதிகமாக இருக்காது. பிராண்டுகள் மற்றும் அளவைப் பொறுத்து ரூ. 5 முதல் 50 வரை விலைஉயர்வு இருக்கும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் மற்றும் வோட்கா ஆகிய குறைந்த விலை பிராண்டுகளின் விலையானது குவாட்டர் பாட்டிலுக்கு (180 மில்லி) ரூ.5 ஆகவும், ஆஃப் பாட்டிலுக்கு (375 மிலி) ரூ.10 ஆகவும், மேலும் 750 மில்லி முழு பாட்டிலுக்கு ரூ.20வரை உயர்த்தப்படலாம். மேலும் பீர் விலையும் ஒரு பாட்டிலுக்கு குறைந்தது ரூ.10 வரை அதிகரிக்கப்படும்.

நடுத்தர மற்றும் உயர் ரக பிராண்டுகளுக்கு ரூ.10 முதல் ரூ.80 வரை விலைஉயர்வு இருக்கும். உத்தேச கட்டணங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். இதுகுறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். அப்போது என்னென்ன சரக்கு எவ்வளவு விலை என்பதை பொதுமக்களுக்கு தெரிவிப்போம். 2022-2023ம் ஆண்டில், மதுபான விற்பனை மூலம் மொத்த வருவாய் ரூ.44,098.56 கோடியாக இருந்தது. இந்த உயர்வின் மூலம் மேலும் ரூ.500 முதல் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும். இருப்பினும், பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து இன்னும் சில நூறு மதுபானக் கடைகளை மூட அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post டாஸ்மாக் கடைகளில் மது விலையை உயர்த்த திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: