டிபிஐ வளாகத்தில் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் சார்பில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னையில் குவிந்து வெவ்வேறு வகையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் டிபிஐ வளாகம் ஆசிரியர்களால் நிரம்பி வழிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஆசிரியர்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டதால், பலகட்ட போராட்டங்களை ஆசிரியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தின. அதிமுக ஆட்சியில் இவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆசிரியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றிய இடங்களில் மீண்டும் பணியாற்றும் நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், ஆசிரியர்களை அழைத்து நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதன் பேரில் அனைத்து ஆசிரியர் சங்கங்களை அழைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பிறகு அவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார். அதற்கான பணிகளில் பள்ளிக் கல்வித்துறை தற்போது ஈடுபட்டுள்ள நிலையில், மீண்டும் சில ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன.

தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. ஊதிய முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை. இதையடுத்து, செப்டம்பர் 28ம் தேதி காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்தது. அதன்படி, 28ம் தேதி முதல் இந்த சங்கத்தினர் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அவர்களைப் போல, தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு டிபிஐ வளாகத்தில் கடந்த 25ம் தேதி முதல் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக அங்கேயே தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகின்றனர். மேலும், அவர்களை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கேட்டு அவர்களும் டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அக்டோபர் 13ம் தேதி டிட்டோ-ஜாக் அமைப்பினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதையடுத்து ஒவ்வொரு ஆசிரியர் சங்கத்ைத சேர்ந்தவர்களும் சென்னையில் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதனால் பள்ளிக் கல்வித்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கல்வியதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர் சங்கங்களிடம் கடந்த மாதம் பள்ளிக் கல்வி அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தி, ஒவ்வொரு சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கிய கோரிக்கைகள் தொடர்பான உண்மைத் தன்மை மற்றும், அதன் மதிப்பையும் உணர்ந்து முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் படிப்படியாக ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் சில சங்கங்களின் கோரிக்கைகள் குறித்தும் நேரில் அழைத்து பேசி வருகிறோம். விரைவில் இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர். டிபிஐ வளாகத்தில் தற்போது 4 சங்கத்தினர் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post டிபிஐ வளாகத்தில் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: