கேளம்பாக்கம் அருகே சாலையில் விடப்படும் கழிவுநீரால் துர்நாற்றம்; பொதுமக்கள் அவதி

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே ஓஎம்ஆர் சாலையில் கழிவுநீர் விடும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில் கேளம்பாக்கம் மற்றும் படூர் ஊராட்சிகள் அருகருகே அமைந்துள்ளன. இங்கு தனியார் பல்கலைக்கழகம், மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளும், வர்த்தக நிறுவன கட்டிடங்களும் ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், படூர் தனியார் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவுநீர் ஓஎம்ஆர் சாலையில் விடப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் கழிவுநீரில் நின்றபடி பேருந்துக்காக காத்திருக்கும் அவலநிலை இருந்து வருகிறது. படூர் ஊராட்சியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் கேளம்பாக்கம் ஊராட்சி வரை ஓஎம்ஆர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இந்த கழிவுநீரில் வாகனங்கள் செல்லும்போது சாலையில் செல்வோர் மீது கழிவுநீர் பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பல நாட்களாக கழிவுநீர் செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, ஓஎம்ஆர் சாலையில் கழிவுநீரைவிடும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கேளம்பாக்கம் அருகே சாலையில் விடப்படும் கழிவுநீரால் துர்நாற்றம்; பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: