சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், இம்மாத இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவில் மழை பெய்வதும் என வித்தியாசமான வானிலை நிலவுகிறது. தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் செப்டம்பர் முடியும் வரை இருக்கும்.
அதை தொடர்ந்து, அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி டிசம்பர் வரை மழை பொழிவை ஏற்படுத்தும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தான் இன்று முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்திற்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை தான் அதிக அளவில் கை கொடுக்கும் என்பதால் விவசாயிகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. அதேபோன்று இந்த மாதம் தொடக்கம் முதல் பருவமழையின் அளவு அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்னையில் தினமும் இரவு நேரங்களில் மழை தொடர்ந்து பெய்து வந்தது. ஆனால் பகல் நேரங்களில் கோடை காலத்தை போன்று வெயில் சுட்டெரித்தது. இரவில் மழையும், பகலில் சுட்டெரிக்கும் வெயில் என வித்தியாசமான வானிலை சென்னையில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
The post தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
