தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

*குழந்தைகள் பாதுகாப்பாக வளர உதவுகிறது

*16 வட்டாரங்களுக்கு ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் சமூக நலத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் 300 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மஹாலில், தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். எம்.பி., எஸ்.எஸ்.பழநி மாணிக்கம் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:

தாய் – சேய் நலம் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமுதாய வளைகாப்பு விழாவும் இதுபோன்ற ஒரு நிகழ்வே. ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் குழந்தையை வரவேற்கும் முகமாக வளைகாப்பு விழா நடத்துவது வழக்கம். இருப்பினும், அரசு அலுவலர்களும், சமுதாயமும் கர்ப்பிணிக்கு உறுதுணையாக இருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக, கர்ப்பகாலத்தில் தங்களை பராமரித்துக் கொள்ளும் வழிமுறை குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.

கருவில் உள்ள குழந்தைக்கு கேட்கும் திறன் ஆறாம் மாதம் முதலே துவங்கிவிடுவதால், தாயின் வளையலோசை கேட்டு, குழந்தையின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பாதுகாப்பு உணர்வுடன் நலமாக குழந்தை வளர இவ்விழா உதவி செய்கிறது.மேலும் பிரசவம் குறித்து தேவையற்ற பயம் தவிர்த்து கர்ப்பிணி மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்கவும், உற்றார் உறவினர்களும், கர்ப்பிணியை மகிழ்வுடன் வைத்துக்கொள்ள, அவர்களுக்குரிய கடமையை உணர்த்தும் விதமாகவும் இவ்விழா நடத்தப்படுகிறது.

வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடத்துவதற்காக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 16 வட்டாரங்களுக்கும் ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 16 வட்டாரங்களிலும் செயல்படும் 1,749 அங்கன்வாடி மையங்களிலும் பதிவு செய்யப்பட்டு கர்ப்பிணிகள் பயனடைந்து வருகின்றனர்.இவ்வாறு எம்.பி. எஸ்.எஸ். பழநிமாணிக்கம் பேசினார்.இதைத் தொடர்ந்து 300 கர்ப்பிணிகளுக்கு தாம்பூழ தட்டுடன் கூடிய பூமாலை, வளையல், மங்கலநாணி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், சாத்துக்குடி, காப்பரிசி, கடலைமிட்டாய், வேப்பம் காப்பு மற்றும் அனைவருக்கும் மதிய உணவு வகைகளாக எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல் புதினா துவையல், ஊறுகாய், சிப்ஸ், அரிசி வடகம் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ துரை சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பாபநாசம் ஒன்றிய குழுத் தலைவர் சுமதி கண்ணதாசன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் அருளானந்தசாமி, மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லதா, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

*பிரசவம் குறித்து தேவையற்ற பயத்தை தவிர்த்து கர்ப்பிணி மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்கவும், உற்றார் உறவினர்களும், கர்ப்பிணியை மகிழ்வுடன் வைத்துக்கொள்ள, அவர்களுக்குரிய கடமையை உணர்த்தும் விதமாகவும் இவ்விழா நடத்தப்படுகிறது.

*அரசு அலுவலர்களும், சமுதாயமும் கர்ப்பிணிக்கு உறுதுணையாக இருப்பதை எடுத்துக்காட்டும் விதமாக, கர்ப்பகாலத்தில் தங்களை பராமரித்துக் கொள்ளும் வழிமுறை குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.

The post தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: