மருத்துவ கல்லூரியில் சேர்ந்த பிறகு வசதியான மாணவர்களை பார்த்து மனம் தளரக்கூடாது

*கவர்னர் தமிழிசை அறிவுரை

புதுச்சேரி : மருத்துவ கல்லூரியில் சேர்ந்த பிறகு வசதியான மாணவர்களை பார்த்து மனம் தளரக்கூடாது என கவர்னர் தமிழிசை பேசினார். புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களை பாராட்டி சிறப்பு செய்யும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு தமது சொந்த செலவில் மருத்துவ புத்தகங்கள், ஸ்டெதஸ்கோப்பு மற்றும் சீருடை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் 10% இடஒதுக்கீட்டை எதிர்பார்த்து இருக்காமல் இனி வரும் காலங்களில் நீட் தேர்வில் பொதுப்பிரிவிலேயே முன்னிலையில் வரும் அளவுக்கு உழைத்து முன்னேற வேண்டும். நீங்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த பிறகு அங்கு பொருளாதார ரீதியாக பலதரப்பட்ட மாணவர்களை சந்திக்க கூடும். அதனை கண்டு மனம் தளரக்கூடாது. மதிப்பெண்களை அதிகம் பெறுவதன் மூலமாக நீங்கள் உயர வேண்டும். அதற்கு மிகவும் உறுதியாகவும் நீங்கள் இருக்க வேண்டும். முன்பு கல்லூரிகளில் ராகிங் பழக்கம் மாணவர்களுக்கு ஒரு மன உளைச்சலை தந்தது. இப்போது அவை களையப்பட்டுள்ளது. எப்போதும் உங்களுக்குள் இருக்கும் குரலை கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

உயிருக்கு போராடும் ஒரு மனிதரை காப்பாற்றும்போது ஒரு மருத்துவராக பெரு மகிழ்ச்சி அடைவீர்கள். நான் அரசியல்வாதியாக மாறியதற்கு மருத்துவராக இருந்ததுதான் காரணம். தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. உடனடியாக அதை துறை அதிகாரியிடம் சென்று அனைவருக்கும் வேண்டிய மருத்துவ வசதிகளை செய்து தருமாறு கேட்டேன்.

முதலில் என்னை பெரிதும் பொருட்படுத்தாத அவர், என் தந்தை பெரிய அரசியல்வாதியாக இருந்ததை அறிந்தவுடன் உடனடியாக நான் கேட்ட அடிப்படை வசதிகளை செய்தார். அப்போது மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் கூட அதிகாரத்தில் நாம் இருக்க வேண்டும் என்கிற புரிதல் எனக்கு வந்தது. அது என்னை மக்களுக்கு உதவ அதிகாரத்தை பெற வேண்டும் என்கிற நிலையை நோக்கி பயணம் செய்ய திருப்புமுனையாக இருந்தது. இப்போது நான் அதிகாரத்தில் இருக்கிறேன். மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து கொண்டு வருகிறேன்.

மருத்துவர்கள் நோயாளிகளின் மீதும் அவர்களது உறவினர்கள் மீதும் கோபம் கொள்ளக்கூடாது. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் இயலாமையின் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கும் சூழலில் நம்மை சில நேரங்களில் எரிச்சல் ஊட்டும் வகையில் நிகழ்வுகள் நடந்தாலும் பொறுமையாக அதனை கையாள வேண்டும். உங்களை பெற்றெடுத்த பெற்றோர்களை வாழ்க்கையில் எப்போதும் மறக்கக்கூடாது.

மருத்துவ கல்லூரியில் சேரும் போது உங்களுக்கு நிறைய பழக்கங்கள், அறிமுகங்கள் ஏற்படும். அவைகள் சில நேரங்களில் தவறாக இருப்பின் அதிலிருந்து உங்களை காத்துக்கொள்ள வேண்டும். மருத்துவராக ஆனதும் சம்பாதியுங்கள். ஆனால் சம்பாதிக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டாம். தனியார் மருத்துவ கல்லூரியில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறிய கோரிக்கைகளை ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா, கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, உயர்கல்வித்துறை இயக்குநர் அமன் சர்மா, சுகாதாரத்துறை சார்பு செயலர் கந்தன், இயக்குநர் ராமலு மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post மருத்துவ கல்லூரியில் சேர்ந்த பிறகு வசதியான மாணவர்களை பார்த்து மனம் தளரக்கூடாது appeared first on Dinakaran.

Related Stories: