முறைகேடுகள் ஏதும் நடக்கிறதா? ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஊராட்சி தலைவர் திடீர் ஆய்வு

ஊட்டி : ஊட்டி – கோத்தகிரி சாலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவர் விடுதியில் முறைகேடுகள் ஏதும் நடக்கிறதா? என நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் திடீரென ஆய்வு செய்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நீலகிரி மட்டுமின்றி சமவெளி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்களும் தங்கி பயின்று வருகின்றனர்.

கூடலூர் உள்ளிட்ட தொலைதூர பகுதிகள் மற்றும் சமவெளி பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயில வசதியாக கல்லூரி மாணவ, மாணவியர்கள் விடுதிகள் ஊட்டியில் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவர் விடுதி ஊட்டி – கோத்தகிரி சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விடுதியில் சேர்க்கை அனுமதிக்கு மாணவர்களிடம் கல்லூரியில் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுகிறதா என நேற்று மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவர்களுக்கு முறையாக தெரிவித்துள்ள படி தரமான உணவு வழங்கப்படுகிறதா என காப்பாளரிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வில் விடுதியில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என தெரிய வந்தது. விடுதி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மாணவர்கள் தரமான உணவு வழங்கப்படுவதை காப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post முறைகேடுகள் ஏதும் நடக்கிறதா? ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதியில் மாவட்ட ஊராட்சி தலைவர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: