தொடர் விடுமுறை எதிரொலி: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்… அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சி

நெல்லை: தொடர் விடுமுறையால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கனமழையால் அருவிகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் பெய்து வரும் திடீர் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு நிறைவடைந்து 5 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், குற்றாலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 நாட்கள் திருவிழா இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் அதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்.

அதிக அளவிலான சுற்றுலா பயணி வருகையால் மெயின் அருவி மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. அவர்கள், அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதே போல் ஐந்தருவிக்கு செல்லும் பாதையில் உள்ள படகு குழாமிலும் தண்ணீர் நிரம்பி இருப்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தொடர் விடுமுறை எதிரொலி: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்… அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: