பட்டிவீரன்பட்டி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத கோயில் விழா 100 ஆடுகள் பலியிட்டு அமர்க்கள கறி விருந்து

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத கோயில் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு அசைவ உணவு அமர்க்களமாகப் பரிமாறப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சடையாண்டி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு திருவிழாவையொட்டி அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயிலிருந்து சுவாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சடையாண்டி கோயிலுக்கு ஊர்வலமாக நேற்று எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சுவாமி பெட்டிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு, அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவில் சடையாண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை முடிந்தவுடன் ஆண் பக்தர்களுக்கு காலை வரை விடிய, விடிய அசைவ உணவு பறிமாறப்பட்டது. பெரிய உருண்டைகளாக பிடிக்கப்பட்ட சோறுடன், எலும்பு குழம்பு, மட்டன் வறுவல் போன்றவை பறிமாறப்பட்டன்.

கறி விருந்தில் அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post பட்டிவீரன்பட்டி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற விநோத கோயில் விழா 100 ஆடுகள் பலியிட்டு அமர்க்கள கறி விருந்து appeared first on Dinakaran.

Related Stories: