இவர்களில் 2 பேர், பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தேவாரம் பயின்ற பெரம்பலூரை சேர்ந்தவர்கள். 5 பெண் ஓதுவார்களில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த சின்னையன்- சரஸ்வதி தம்பதி மகள் சிவரஞ்சனியும்(30) ஒருவர். இவர், பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி மற்றும் பிஎட் பட்டம் பெற்றவர். இவரது கணவர் அருண்ராஜ். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஓதுவார் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் சிவரஞ்சனி தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து சிவரஞ்சனி, சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக கன்னியம்மன் கோயிலில் ஓதுவார் பணிக்கு பணிநியமன ஆணை பெற்றுள்ளார்.
அதேபோல் 10 ஆண் ஓதுவார்களில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து- பூங்கோதை தம்பதி மகன் அமரனும் (26) ஒருவர். இவர், பெரம்பலூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை தேவாரமும், பின்னர் 3 ஆண்டுகள் நாதஸ்வரமும் படித்தவர். அமரன் சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் ஓதுவார் பணிக்கு பணி நியமன ஆணை பெற்றுள்ளார்.
இதுகுறித்து அமரன் கூறுகையில், ‘தற்போது அரசு பணியாக சென்னையில் உள்ள பிரபலமான கோயிலில் ஓதுவார் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பது, எங்கள் தலைமுறைக்கு கிடைத்த பாக்கியம். தேர்வின்போது பாடி காட்டிய முதல் பாடலிலேயே நான் தேர்வு செய்யப்பட்டேன் என்பது பெருமையாக உள்ளது’ என்றார்.
சிவரஞ்சனி கூறுகையில், ‘தொடர்ந்து திருப்புகழ்களை பாடி வந்ததால், எனக்கு தெய்வமே இந்த பணி வாய்ப்பை வழங்கி உள்ளது. பெண்களும் இந்த அரிய வாய்ப்பை பெற காரணமான முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் சேகர்பாபுவுக்கும் நன்றி’ என்றார். பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர் நடராஜன் கூறுகையில், ‘சிவரஞ்சனி, அமரன் ஆகிய இருவரால் மாவட்ட அரசு இசை பள்ளிக்கு கிடைத்த பெருமையாகும்’ என்றார்.
The post ஓதுவார் பணி எங்கள்தலைமுறைக்கு பாக்கியம்: நியமனம் பெற்றவர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.
