வேலூர், செப்.29: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கேந்திப்பூ விற்பனையாகததால் சாலையில் வீசப்பட்டுள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட் வளாகத்தில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு பெங்களூரு, வி.கோட்டா, குப்பம், கடப்பா, ஓசூர், சேலம், தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மல்லிகை, முல்லை, கேந்தி, ரோஜா, சாமந்தி, கனகாம்பரம், கோழிகொண்டை உள்ளிட்ட பலவகையான பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் முகூர்த்த நாட்கள் இல்லை. திருமணம், பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களும் இல்லை என்பதால் பூக்கள் விலை கடந்த சில நாட்களாக விலை குறைந்துள்ளது. மேலும், வரத்து அதிகமாக உள்ளதால் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக சாமந்தி பூ கிலோ ₹40க்கும், ரோஜா ₹100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கேந்திப்பூ கிலோ ₹5க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் வாகனங்களில் கொண்டு வரும் கட்டணத்திற்கு கூட பூ விலை விற்பனை ஆகவில்லை. இதனால் விற்பனையாகமல் இருக்கும் பூக்களை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சாலையில் கொட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லை, மல்லி மட்டும் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மற்ற பூக்கள் அனைத்தும் விலை குறைவாகத்தான் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்களை வாங்க பொதுமக்களும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post பூக்கள் விலை திடீர் வீழ்ச்சியால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை கேந்திப்பூ சாலையில் வீச்சு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் appeared first on Dinakaran.