பசுமை புரட்சியின் தந்தை என அறியப்பட்ட பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98), வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை 11.20 மணி அளவில் காலமானார். அவர் தனது 90 வயதிலும், தனது ஆராய்ச்சி அறக்கட்டளை பணிகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வந்தார். அவரது உடல் தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவியும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலருமான மீனா சுவாமிநாதன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார். எம்.எஸ்.சுவாமிநாதன், மீனா சுவாமிநாதன் தம்பதியினருக்கு சவுமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யாராவ் ஆகிய 3 மகள்கள், 5 பேரக் குழந்தைகள் உள்ளனர்.
எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விஞ்ஞானிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம்தேதி கும்பகோணம் டாக்டர் எம்.கே.சாம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மாள் ஆகியோருக்கு 2வது மகனாகப் பிறந்தார். அங்கு பள்ளி படிப்பை முடித்தார். தொடர்ந்து, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்றார். வேளாண் அறிவியல் மற்றும் மரபியல் படிப்பை தொடர்ந்தார்.
இவரது தந்தை மருத்துவர். இவரும் மருத்துவராகி, தந்தையின் மருத்துவமனையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. ஆனால், வங்கத்தில் 1942ல் ஏற்பட்ட பஞ்சம் இவரை மிகவும் பாதித்தது. வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தார். கோவை வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார். அதை தொடர்ந்து, பல ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றினார்.
இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்திய எம்.எஸ்.சுவாமிநாதன், சர்வதேச அளவில் புகழ் பெற்றார். அரிசி தட்டுப்பாட்டை நீக்க நவீன வேளாண் அறிவியல் முறைகளை கண்டறிந்த பெருமை இவரையே சேரும். இவர், 3 பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். ஆசியாவின் நோபல் விருது என போற்றப்படும் மகசேசே விருதையும் அவர் பெற்றுள்ளார். பத்மவிபூஷன், எஸ்எஸ் பட்நாகர் உள்ளிட்ட விருதுகளையும், இந்திய மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஏராளமான கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
இந்தியாவில் பசுமைப் புரட்சி 1960ம் ஆண்டு தொடங்கியது. இந்த நேரத்தில், அதிக மகசூல் தரும் வகை விதைகள், இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணை கருவிகள், நீர்ப்பாசன முறைகள், களைக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற புதுமைகளின் வேலைவாய்ப்பு மூலம் இந்தியாவின் விவசாயம் ஒரு நவீன தொழில்துறை அமைப்பாக மாற்றி அமைத்தார். வேளாண் துறையில் மிகப்பெரிய சாதனைகள் புரிந்துள்ளார். வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற வைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பசிப்பிணி ஒழிப்பு – உணவு பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காக கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் – வேளாண்மை துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநானைகவுரவிக்கும் விதமாக அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அறிவியல் துறை, தமிழ்நாட்டுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு: முதல்வர்
வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
பசிப்பிணி ஒழிப்பு – உணவு பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காக கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தலைவர் கலைஞர் உடனும், என்னுடனும் எப்போதும் நல்ல நட்பை பேணி வந்தார். 1989ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞரிடத்தில் சுவாமிநாதன் கோரிக்கை வைத்ததும், தரமணியில் அவர் நிலம் வழங்கிய இடத்தில்தான் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அவரது இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்: அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் இரங்கல் appeared first on Dinakaran.
