மோடி ஆட்சியின் 9 ஆண்டுகளில் ரூ.14.56 லட்சம் கோடி வாராக்கடன் நீக்கியதால் வங்கி தொழில் பாதிப்பு: மம்தா தலைமை ஆலோசகர் புகார்

கொல்கத்தா: மோடி தலைமையிலான ஆட்சியின் 9 ஆண்டுகளில் பெரும் வாராக்கடன்கள் நீக்கப்பட்டதால் வங்கி தொழில் நலிவடைந்து உள்ளதாக முதல்வர் மம்தாவின் தலைமை ஆலோசகர் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் 16வது இந்திய தொழில் கூட்டமைப்பின் வங்கி அமர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அம்மாநில முன்னாள் நிதியமைச்சரும் முதல்வர் மம்தாவின் தலைமை ஆலோசகருமான அமித் மித்ரா பங்கேற்று பேசியதாவது: கடந்த 2014-2023 வரையிலான 9 ஆண்டுகளில் வங்கிகள் கணக்கின் வாராக்கடன் பட்டியலில் இருந்து ரூ.14.56 லட்சம் கோடி பெருந்தொகை நீக்கப்பட்டுள்ளது.

இது கடந்த நிதியாண்டில் ரூ.2.09 லட்சம் கோடியாகவும் அதற்கு முந்தைய 2021-22 நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடியாகவும் இருந்தது. நாடாளுமன்றத்தில் பேசிய நிதி இணையமைச்சர் பக்வத் கராத், ரூ.14.56 லட்சம் கோடி, பெருந்தொழில் மற்றும் அதனை சார்ந்த சேவை பிரிவுகளின் வாராக்கடனில் ரூ.7.40 லட்சம் கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறினார். அதே நேரம், கொடுத்த கடனை வசூலிப்பது மிக குறைந்தளவிலேயே உள்ளது. ரூ.14.56 லட்சம் கோடி தள்ளுபடியான நிலையில் வெறும் ரூ.2.04 லட்சம் கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ரூ.12 லட்சம் கோடி இன்னும் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதாவது கடந்த 2005-2014 வரையிலான 9 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த வாராக்கடன் தொகை ரூ.2.20 லட்சம் கோடி மட்டுமே.

* கடந்த 2014-2023 வரையிலான 9 ஆண்டுகளில் வங்கிகள் கணக்கின் வாராக்கடன் பட்டியலில் இருந்து ரூ.14.56 லட்சம் கோடி பெருந்தொகை நீக்கப்பட்டுள்ளது.

* கடந்த மார்ச் 31, 2023 வரை வங்கியில் கடன் வாங்கி விட்டு, வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் பட்டியலில் உள்ள முதல் 50 கணக்குகளின் மொத்த தொகை ரூ.87.925 கோடியாக உள்ளது.

The post மோடி ஆட்சியின் 9 ஆண்டுகளில் ரூ.14.56 லட்சம் கோடி வாராக்கடன் நீக்கியதால் வங்கி தொழில் பாதிப்பு: மம்தா தலைமை ஆலோசகர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: