காஞ்சி, மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்களின் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.64.76 லட்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், மாங்காடு காமட்சியம்மன், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களில் உண்டியல் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டன. இதில், பக்தர்கள் ரூ.64.76 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த ஒரு மாதத்துக்கு பின்பு 2 உண்டியல்கள் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டன. கோயில் வளாகத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 30 லட்சத்து 33 ஆயிரத்து 488 ரூபாயும், 120 கிராம் தங்கம் மற்றும் 185 கிராம் வெள்ளி காணிக்கையாக பெறப்பட்டது.

கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் கோயில் பணியாளர்கள் மற்றும் சேவா அமைப்பினரால் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டு பின்னர் அத்தொகை வங்கியில் வரவு வைக்கப்பட்டது. அதேபோல், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஒரு மாதத்திற்கு பின்பு, அறநிலையத்துறை ஆய்வாளர் திலகவதி, கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில், 6 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கமாக 6 லட்சத்து 54 ஆயிரத்து 459 ரூபாயும், 25,800 கிராம் தங்கமும், 298.400 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

குன்றத்தூர்: மாங்காடு காமாட்சியம்மன் கோயிலுக்கு, தினமும் சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள், தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி, கோயில் உண்டியல்களில் தங்கம், வெள்ளி, பணம் என்று தங்களால் முடிந்த காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் உண்டியல்கள் அனைத்தும் ஒருசில மாதங்களில் கோயில் வளாகத்தில் வைத்து எண்ணப்படுவது வழக்கம்.

அதேபோன்று கோயில் வளாகத்தில் இருந்த உண்டியல்கள் பக்தர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டது. அதில் 34லட்சத்து 43 ஆயிரத்து 894 ரூபாய் ரொக்கமும், 152.500 கிராம் தங்கமும், 521 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த உண்டியல் பணம் எண்ணும் பணிகள் அனைத்தும், கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி டாக்டர்.சீனிவாசன், கோயில் துணை ஆணையர் கவெனிதா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை உண்டியல் எண்ணும் பணிகள் நடைபெற்றது. முன்னதாக உண்டியல் காணிக்கை பணம் என்னும்போது, மாங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post காஞ்சி, மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்களின் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.64.76 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: