கிச்சன் டிப்ஸ்

* குழம்பு நீர்க்க இருந்தால், அதில் ஒரு தேக்கரண்டி சோளமாவைக் கொஞ்சம் தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிட்டால் குழம்பு கெட்டியாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.
* இட்லிப்பொடி அரைக்கும்போது, கொஞ்சம் உப்பில்லாமலும் அரைத்து வைத்துக் கொள்ளவும். குழம்பு நீர்த்துப் போகும்போது இதில் ஒரு தேக்கரண்டி சேர்த்தால் கெட்டியாகும். இந்தப் பொடியைக் காய்கறி ரோஸ்டில் சேர்க்க மணமும், சுவையும் அபாரமாக இருக்கும்.
* குழம்பில் உப்பு அதிகமானால், கொஞ்சம் வெங்காயம், தக்காளியை வதக்கி அரைத்து சேர்த்தால் கமகமவென்று ஹோட்டல் குழம்பு போல மணக்கும்.- இரா. அமிர்தவர்ஷினி.
* குளிர்ச்சியும், இருட்டும் உள்ள இடத்தில்தான் பால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.
* தக்காளிப் பச்சடி, கீரை மசியல் போன்றவை செய்யும்போது தாளிக்க கடுகுக்குப் பதில் சீரகம் சேர்த்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* மிக்சரில் உப்பு அதிகமாக இருந்தால், சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு குலுக்கிவிட்டு பரிமாறினால் உப்பு கரிப்பு குறைந்துவிடும்.
* மோர்க்குழம்பு செய்யும்போது மிளகாய் வற்றலை வறுத்தரைத்து சேர்த்தால் குழம்பு வெள்ளையாக இருக்கும்.
* கத்தரிக்காய், கொத்தவரங்காய், பாகற்காய் போன்றவற்றை சமைக்கும்போது சிறிது புளிக்கரைசலை விட்டால் கசப்பு குறையும். சாப்பிட சுவையாகவும் இருக்கும்.
* காய்ந்த கெட்டியான சீஸ்ஸை உதிர்த்து முட்டையுடன் கலந்து ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும்.
* ஆம்லெட் செய்யும்போது முட்டையுடன் சிறிது பால் சேர்த்தால் ஆம்லெட் மென்மையாக இருக்கும்.
* இரண்டாவது முறை அரிசி களைந்த தண்ணீரில் பருப்பு வேக வைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.- இந்திராணி தங்கவேல்.
* சாம்பார், வற்றல் குழம்பு இவற்றில் காரம் அதிகமாகி விட்டால் நல்லெண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். காரம் குறைந்து விடும். மணமுடனும் இருக்கும்.
* அப்பளம் நமத்துப் போனால், சிறு துண்டுகளாகக் கிழித்து, வெறும் வாணலியில் இரண்டு நிமிடங்கள் புரட்டி எடுத்து, பிறகு பொரித்தால் சூப்பராகிவிடும்.
* இட்லி தட்டு குழிகளில் வட்டமான சிறுசிறு தட்டுகளை வைத்து, தோசைபோல் மாவை ஊற்றி வேக வைத்து எடுத்து, விருப்பமான வடிவில் வெட்டி எடுத்து சாப்பிடலாம். வித்தியாசமான இட்லி தயார்.- அமுதா அசோக்ராஜா.

 

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: