ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளை தீர்க்க ஊராட்சி மணி உதவி மையம்: அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: ஊராட்சிகளில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஊராட்சி மணி என்ற உதவி மையத்தை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சிகளில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஊராட்சி மணி என்ற உதவி மையத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளைக் களைவதற்காக ஊராட்சி மணி என்கிற அமைப்பு ஊரக வளர்ச்சி துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு இலவச குறை தீர்வு அழைப்பு எண் 155340 பிரத்யேகமாக மாநில அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை மூலம் பொதுமக்கள் மிக எளிமையாக தொலைபேசி (155340), வலைதளம் (Ooratchimani.in) மூலம் எளிதாக அணுக முடியும். மேலும் பெறப்படும் புகார்களின் தன்மைக்கேற்ப அலுவலக ரீதியிலான கால தாமதம் தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அப்புகார் மீது எளிய முறையில் உடனடி தீர்வு காணப்படும்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பெரியசாமி கூறியதாவது: ஊராட்சி மணி உதவி மையத்தில் பெறப்படும் புகார்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதற்கு தீர்வு காணப்படும். இந்த புகார்களின் செயல்முறை நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தப்படும். ஜீவன் திட்டத்தை குறித்து தமிழிசை, அரசியல் காரணத்திற்காக குறை கூறலாம். ஜல் ஜீவன் திட்டத்தை பொறுத்தவரை குழாய் பதிப்பதற்கும் மற்றும் குடிநீர் குழாய் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஏற்படுத்த நிதி ஆதாரம் தேவையாக உள்ளது ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி நிலுவையில் உள்ள நிலையில் அவை வரக்கூடிய பட்சத்தில் இந்த ஜல்ஜீவன் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தேவை அதிகரிக்கும் போது இந்த உதவி மையங்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து உதவி மையத்திற்கு சென்ற அமைச்சர் மக்களிடம் தொலைபேசி வாயிலாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா, துணை இயக்குநர்கள் மற்றும் இதர அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளை தீர்க்க ஊராட்சி மணி உதவி மையம்: அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: