அதிமுக-பாஜ கூட்டணி பிரிய 2 தலைவர்களே காரணம்: பிரேமலதா கருத்து

தஞ்சாவூர்: அதிமுக-பாஜ கூட்டணி பிரிய 2 தலைவர்களே காரணம் என்று பிரேமலதா தெரிவித்தார். தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தேமுதிக சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டி: பாஜ கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு தலைவர்கள் தான் காரணம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தேமுதிக எடுக்கும். நதிநீர் பிரச்னை தீர நதிகள் இணைப்பு மட்டும் தான் ஒரே தீர்வு. விவசாயிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக-பாஜ கூட்டணி பிரிய 2 தலைவர்களே காரணம்: பிரேமலதா கருத்து appeared first on Dinakaran.

Related Stories: