கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் சிக்கிய மிதவையிலிருந்து நீராவி ஜெனரேட்டர்கள் மீட்பு

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் பாறையில் சிக்கிய மிதவையிலிருந்து 2 நீராவி ஜெனரேட்டர்கள் நேற்று மீட்கப்பட்டன. நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5 மற்றும் 6 வது அணு உலைகளுக்காக ரஷ்யாவில் இருந்து தலா 310 டன் எடை கொண்ட 2 நீராவி ஜெனரேட்டர்கள் மிதவையில் ஏற்றி இழுவை கப்பலில் எடுத்து வரப்பட்டது. கடந்த 8ம் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 300 மீட்டர் தூரத்தில் வந்தபோது பாறை இடுக்கில் மிதவை சிக்கியது. சென்னை, மும்பையில் இருந்து வந்த மீட்புக்குழுவினர் மிதவையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும் முடியவில்லை.

இலங்கையில் இருந்து அதி நவீன இழுவை கப்பல் வரவழைத்தும் முடியாததால் 300 மீட்டர் தூரம் கடலில் மணல் மற்றும் கற்கள் கொட்டப்பட்டு சாலை அமைக்கும் பணி கடந்த 10 நாட்களாக இரவு பகலாக நடந்தது. இப்பணி நேற்று முடிந்ததும் ஜெனரேட்டர்கள் மீட்பு பணியில் இந்திய கடற்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று மதியம் 2 நீராவி ஜெனரேட்டர்களையும் பெரிய ஹைட்ராலிக் கிரேன்கள் கொண்ட டிரெய்லர் மூலம் மீட்டனர். 19 நாள்களுக்குப்பின் 2 நீராவி ஜெனரேட்டர்களும் எந்தவித சேதாரமும் இன்றி மீட்கப்பட்டதாக அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் சிக்கிய மிதவையிலிருந்து நீராவி ஜெனரேட்டர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: